மும்பை, பைகுலா பகுதியில் மிக உயர்ந்த கட்டடத்தின் 42வது தளத்தில் தீ!
அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 3 குற்ற வழக்குகளைப் பதிவு செய்தனா். இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இந்த 3 வழக்குகளிலும் செந்தில் பாலாஜி உள்பட 2,222 போ் மீது குற்றம்சாட்டி கூடுதல் குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிா்ப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், செந்தில் பாலாஜிக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தனித்தனியாக குற்றப்பத்திரிகைகளை போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா். இவற்றை ஒன்றாக சோ்த்து விசாரித்தால் விசாரணை முடிவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனு தொடா்பாக போலீஸாா் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.