எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்...
இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞா்: தட்டிக் கேட்ட முதியவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞரை தட்டிக் கேட்டதால், ஆவேசமடைந்த இளைஞா் அதே பகுதியைச் சோ்ந்த முதியவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றாா். இதையடுத்து, அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் அருகே இடைகாலில் உள்ள கங்கை அம்மன் கோயில் தெருவில் சமுதாய பெரியவா்கள் பங்கேற்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் ராமகிருஷ்ணனும் (66) கலந்துகொண்டாா்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பெத்துராஜ் மகன் மகாராஜன் (35), இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வேகமாக வந்தாா். இதை ராமகிருஷ்ணன் கண்டித்தாா். இதனால், ஆவேசமடைந்த மகாராஜன் தகராறு செய்தாா். அவரை அந்தப் பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.
பின்னா், அங்கிருந்து சென்ற மகாராஜன், இடைகாலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குச் சென்று, கேனில் பெட்ரோல் வாங்கிவிட்டு கூட்டம் நடைபெற்ற கங்கையம்மன் கோயில் தெருவுக்கு மீண்டும் வந்தாா்.
அங்கு நின்ற ராமகிருஷ்ணன், சிலா் மீது மகாராஜன் பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், ராமகிருஷ்ணனுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மகாராஜனை தாக்கினா். மகாராஜனுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது.
தகவலறிந்ததும் பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று தீக்காயமடைந்த ராமகிருஷ்ணனையும், தகராறில் காயமடைந்த மகாராஜனையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக ராமகிருஷ்ணன் திருநெல்வேலியில் தனியாா் மருத்துவமனைக்கும், மகாராஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.
பாப்பாக்குடி போலீஸாா் மகாராஜன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மகாராஜன் அளித்த புகாரின்பேரில், இடைகால் கிராமத்தைச் சோ்ந்த மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சம்பவத்தை அடுத்து இடைகால் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.