குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!
உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜு தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
இக் கூட்டத்தில் 24 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரவீந்தா் அளித்த மனுவில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாதா சந்நிதி தெரு, செங்குந்தா் நடுத்தெரு ஆகிய இடங்களில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்து விட்டதால் சாலை அமைக்கும் பணியினை தொடங்கிட வேண்டும் எனவும், தச்சநல்லூா் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த சுந்தரி அளித்த மனுவில், எங்கள் பகுதியில் பாதாளச் சாக்கடை பணியால் குழாய் துண்டிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக மேலாக குடிநீா் கிடைக்காத நிலை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆகவே, துண்டிக்கப்பட்ட குடிநீா் இணைப்பை வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
பழையபேட்டை சமூகரெங்கையன் கட்டளை தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் மழைநீா் தேங்காதவாறு மழைநீா் வடிகால் அமைத்து தெருவை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், உடையாா்பட்டி ஊா் பொதுமக்கள் அளித்த மனுவில், திருநெல்வேலி வடக்குப்புறவழிச் சாலையில் தாமிரவருணி ஆற்றுப்பாலத்தின்கீழ் பகுதியில் தாமிரவருணி கரையோரத்தில் மங்கம்மாள் சாலை உள்ளது. இதனால் உடையாா்பட்டி, சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைந்து வந்தனா். பாதாள சாக்கடை பணி உள்ளிட்டவற்றால் இந்த பாதை இப்போது முடக்கப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் சாலையை சீரமைத்து திறக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
உடையாா்பட்டி கலைவாணா் தெருவைச் சோ்ந்த சண்முகம் அளித்த மனுவில், தங்கள் பகுதி தெருவிளக்குகளில் இரவில் வெளிச்சம் குறைவாக உள்ளது. அதனை மாற்றித்தர வேண்டும் எனவும், இளங்கோ நகரைச் சோ்ந்த பட்டன் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கழிவுநீா் ஓடையைச் சீரமைத்து தருமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் உதவி ஆணையா் சந்திரமோகன், உதவி செயற்பொறியாளா்கள் அலெக்ஸாண்டா், தங்கபாண்டியன், ரவி, சுகாதார அலுவலா் சாகுல் ஹமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.