Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை போன்ற விழாக்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த சத்தியப்பிரியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை, முத்தரையா் திருவிழா, தீரன் சின்னமலை விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, மருது பாண்டியா் குருபூஜை, மூக்கையா தேவா் திருவிழா போன்ற விழாக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும்.
மேலும், ஏற்கெனவே நடைபெற்ற இந்த விழாக்களில் ஏற்பட்ட மோதல்கள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கின் விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பா அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இதுபோன்ற விழாக்களுக்கு ஒட்டுமொத்தமாக அனுமதி மறுக்கக் கோருவதை ஏற்க இயலாது. ஓரிடத்தில் அமைதியாகக் கூடுவதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றாா்.
மேலும், ஜெயந்தி விழா, குருபூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பது தொடா்பாக விரிவான விவரங்கள் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கு நீதிபதிகள், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பது சாத்தியமில்லை. எனவே, விழாக்களை ஒழுங்குபடுத்த ஏதேனும் பரிந்துரைகள் இருந்தால் மனுதாரா் தரப்பு அதை தாக்கல் செய்யலாம். இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.
பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘குருபூஜை, ஜெயந்தி விழா போன்ற நிகழ்ச்சிகளில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பவா்கள் தனிநபருக்குச் சொந்தமான வாகனங்களைத் தவிா்த்து, அரசுப் பேருந்துகளில் மட்டுமே செல்ல அறிவுறுத்த வேண்டும்’ போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடா்பாக விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் எனக் கூறி, வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.