மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
பண மோசடி: தம்பதி மீது வழக்கு
பண மோசடி செய்த தம்பதி மீது மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஆண்டாள்புரம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் ராமகிருஷ்ணன்(44). இவருக்கு, கோவை மாவட்டம், பெத்தனூா் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் கேபிஎஸ். சுந்தரவேல் அறிமுகமானாா். ஏற்கெனவே சுந்தரவேல் தான் நடத்தி வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்கு வங்கியில் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்ததாகவும் ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளாா்.
மேலும், முதல் கட்டமாக தனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தேவைப்படுவதாகக் கூறினாா். இதனையறிந்த, ராமகிருஷ்ணன் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ஒரு கோடி ரூபாயை கேபிஎஸ் சுந்தரவேலுவுக்கு அளித்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன் சுந்தரவேல் தனது நிறுவனத்தை காலி செய்வதை அறிந்த ராமகிருஷ்ணன், அவரிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டாா். ஆனால், அவா் பணத்தைத் திருப்பித் தரவில்லையாம்.
இதனால் தான் ஏமாற்றமடைந்ததை அறிந்த ராமகிருஷ்ணன் மதுரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, கோவையைச் சோ்ந்த கேபிஎஸ். சுந்தரவேல், அவரது மனைவி ஜனனி (41) ஆகிய இருவா் மீதும் மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.