தமுஎகச 2024-ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருத...
``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - பிரேமலதா விஜயகாந்த்
தஞ்சாவூரில், தே.மு.தி.க பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் பிரேமலதா பேசியதாவது, "விஜயகாந்தின் கனவு, லட்சியம் தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்பது தான்.
அவரின் கனவு, லட்சியம், ஜெயிக்க வேண்டும். தே.மு.தி.க-வில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவரும், 2026 தேர்தலில் ஈகோ இல்லாமல் உழைக்க வேண்டும்.

தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணியை, தே.மு.தி.க அமைக்கிறது.
நல்ல வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். நிர்வாகிகள் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ எத்தனை கிடைக்கிறதோ அது வரட்டும்.
ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் நமது கட்சி சார்பாகப் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெறும் போது, ஆல விருட்சம் போல நமது கட்சி தமிழகம் முழுவதும் வேர் ஊன்றி, கவுன்சிலர், சேர்மனாக வர வேண்டும் என்பதுதான் நமது கனவு.
அரசியல் கெத்து
கேப்டனை நம்பி, கட்சியை நம்பி வந்த உங்களை இப்படியே நிர்வாகிகளாக நான் எத்தனை நாள் பார்ப்பது.
உங்களை எல்லாம் சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர் என உங்கள் காரில் போர்டு போட்டு, கெத்தாக வரவேண்டும்.
அரசாங்க பதவி என வரும்போதுதான் அரசியல் அமைப்புக்கே ஒரு கெத்து. வரும் தேர்தலில் கூட்டணியைக் குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் பூத் கமிட்டியை முறையாக அமைத்தால் போதும்.
அப்புறம் பாருங்கள், வரும் 2026 தேர்தலில் நாம் ஒரு மேஜிக் பண்ண போறோம். அந்த மேஜிக் உங்கள் எல்லாரையும் வெற்றிபெறச் செய்யப் போகிறது" என்றார்.

கூட்டணி
பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில், கூட்டணி குறித்து மிகத் தெளிவான அறிவிப்பு வரும்.
ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அது போன்ற நிலைமை கிடையாது.
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம்.
தமிழகத்திலும் வாக்குத் திருட்டு
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்துக் கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும். வாக்குத் திருட்டு பீகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த முறைகேட்டைத் தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதற்கு நீதியரசர்கள் துணையாக இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம் என்றார்.