உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு புதன்கிழமை(செப்.10) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக சமவெளிப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது.
திண்டுக்கல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல், கோடை காலம் போன்று கடுமையான வெப்பம் நிலவியது.
மாலை 6.15 மணி முதல் சுமாா் 45 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. காற்றுடன் பெய்த இந்த மழையினால், நாகல்நகா், பிரதான சாலை, திருச்சி சாலை, பழனி சாலை உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே மேக மூட்டம் நிலவியது. பின்னர் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல், வாழைகிரி, பெருமாள்மலை, மச்சூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது.
இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் கொடைக்கானலில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கொடைக்கானலில் கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை(செப்.10) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.