Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
நேபாளத்தில் ராணுவ ஆட்சி!
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய போராட்டம் கலவரமாக வெடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் அரசு மற்றும் ஆளுங்கட்சி அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
நாட்டின் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அனைத்தும் தீக்கிரையாகின. முன்னாள் பிரதமர் ஜாலநாத் காநலின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில், அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், பிரதமர் சர்மா ஓலி, அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றனர். தொடர்ந்து, அதிபர் ராம் சந்திர பெளடலும் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து இளைஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ராணுவம் நேற்றிரவு முதல் களமிறங்கியுள்ளது.
போராட்டக்காரர்கள் வைத்திருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை உடனடியாக ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கலவரத்தை பயன்படுத்தி மக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, கொள்ளை அடிப்பது போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நேபாளத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் அருகிலுள்ள பாதுகாப்புப் படையினரை அணுகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ஆட்சி அல்லது இடைக்கால அரசாங்கம் அமையும் வரை நேபாளத்தில் ராணுவ ஆட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.