கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது. இது சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் வெளியானதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வண்ணம் பூசும் பணியின்போது எதிர்பாராத விதமாக 7 மீட்டர் உயரத்தில் இருந்து சுத்தியல் ஒன்று கண்ணாடி பாலத்தின் 6-வது கண்ணாடியில் விழுந்ததாகவும், அதில் கீறல் ஏற்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை நிறுவனம் மூலம் ஒப்பந்தம்போடப்பட்டு கண்ணாடி தயாரிக்கப்பட்டதாகவும், கடந்த 1-ம் தேதி கண்ணாடி வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி அகற்றப்பட்டு, புதிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு 17 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அதன்மீது நடந்து சென்று கண்டுகளித்துள்ளனர். கடந்த மாதம் 16-ம் தேதி கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பின்னரும் ஒருலட்சம் சுற்றுலா பயணிகள் அதன்மீது நடந்து சென்றனர். அப்போது எந்த பிரச்னையும் இல்லை. கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் உள்ளது.

கண்ணாடி பாலத்தின் 6-வது கண்ணாடியில் சிறிய கீறல் ஏற்பட்ட நிலையில் அந்த கண்ணாடி அகற்றப்பட்டு புதிய கண்ணாடி தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக பொருத்தப்பட்ட கண்ணாடி மீது நாளை (செப்.10) முதல் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லலாம். கண்ணாடி பாலம் மிகவும் உறுத்தித்தன்மையுடன் இருக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் பாலத்தின் மீது தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.]
இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.