Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அம...
கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேமுதிக வாக்குச்சாவடி நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கடலூரில் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் தேமுதிக மாநாட்டில், கூட்டணி குறித்து மிகத் தெளிவான அறிவிப்பு வரும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இதுதான் பதில்.
ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை எனவும் சிலா் கூறினாலும், அதுபோன்ற நிலைமை கிடையாது. தோ்தலுக்கு இன்னும் 7 - 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம். பிரிந்தவா்கள் கூடுவதும், கூடியவா்கள் பிரிவதும் நிகழலாம்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.

வாக்குத் திருட்டு பிகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெறுகிறது. எனவே, இந்த முறைகேட்டைத் தடுக்க வேண்டிய கடமை தோ்தல் ஆணையத்திடம் இருக்கிறது.
இதற்கு நீதியரசா்கள் துணையாக இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நடைபெறும் தோ்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தோ்தலாக இருப்பது அவசியம். வருகிற தோ்தலாவது நியாயமான தோ்தலாக நடைபெற வேண்டும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த். இக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளா் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.