உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி; இரும்பு மனிதர் அமித் ஷா: செங்கோட்டையன்
உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி, இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி - அமித் ஷாவைப் புகழ்ந்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார்.
அவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பிரதமர் நரேந்திர மோடியாலும், இந்தியாவின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் முன்மொழிபட்டவரும், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வுபெற்று உள்ள இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதபடும் திருநாள் ஆகும். தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை தில்லி சென்ற செங்கோட்டையன் அமித் ஷாவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.