சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாட்களுக்குப் பிறகு சரியத் தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் 6 வது முறையாக கடந்த 2 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
தற்போது காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இதனால், இன்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,275 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் கடந்த 9 நாட்களாக நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மாலை 119.89 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.29 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு