``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - ...
இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (செப்.11) முதல் செப்.16-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இதில், குறிப்பாக செப்.11-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.11-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை பதிவானது. மேலும், துறையூா் (திருச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூா்) - தலா 70 மி.மீ., வேடசந்தூா் (திண்டுக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 60 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப்.11 முதல் செப்.13-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.