Vikatan Digital Awards 2025: அனைவரையும் ரசிக்க வைக்கும் `Billu Show' - Best Kids...
பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் கைது! சதித்திட்டம் முறியடிப்பு!
பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை தில்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையிடம் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக தில்லி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மும்பையில் இருந்து தில்லிக்கு வந்த அபு பக்கர் மற்றும் அஃதாப் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த அஷ்ரஃப் டேனிஷ் என்பவரை ராஞ்சி மற்றும் தில்லி காவல்துறையினர் இணைந்து கைது செய்தனர்.
கைதான ஆசார் டேனிஷ் என்பவர் பாகிஸ்தானில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
டேனிஷிடம் இருந்து கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள், ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, ஹைதராபாத், மும்பை, போபால் உள்ளிட்ட நகரங்களில் தில்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், போபால் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் வகுப்புவாத வெறுப்பை பரப்பி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பல்வேறு இணையதள குழுக்களை இவர்கள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பயங்கரவாத இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்கு ஐஇடி வெடிகுண்டு, ஆயுதங்கள் தயாரிப்பு பயிற்சிகளையும் டேனிஷ் அளித்து வந்துள்ளார்.
இந்த பயங்கரவாத கும்பலின் கைது மூலம், இந்தியாவில் நடத்தப்பட இருந்த தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலுக்கு தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்வதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.