இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு
இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா்.
அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன் போா் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘இத்தாலி அதிபா் ஜாா்ஜியா மெலோனி உடனான உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. உக்ரைன் போருக்கு விரைவில் தீா்வு காண்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். அதேபோல் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை (ஐஎம்இஇசி) அமல்படுத்தியதற்கும் பிரதமா் மெலோனிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆலோசனையின்போது இந்தியா-இத்தாலி வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது’ என குறிப்பிட்டாா்.
இதுகுறித்து இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவா்களும் விவாதித்தனா். உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காண இந்தியா முழு ஆதரவளிப்பதை பிரதமா் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
அதேபோல் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி பாராட்டுகளை தெரிவித்தாா்’ என குறிப்பிடப்பட்டது.
2023-இல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது ஐஎம்இஇசி முன்னெடுப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது ஆசியா-மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை சாலை, ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் ஒருங்கிணைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை 2022, ஜூன் மாதம் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் மீண்டும் தொடங்கின.
புது தில்லியில் இந்த வாரம் 13-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ள நிலையில், நிகழாண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.