தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: ‘புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை’
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வ வாரிய (டிடிபி) தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் நுழைவதைத் தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது. அக்கோயிலுக்குள் நுழைய அந்த வயதுள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் அந்த அமா்வு நீக்கியது.
இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அந்தக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில், தனது நிலைப்பாட்டை டிடிபி மாற்றிக்கொள்ளுமா? அதுகுறித்து டிடிபி தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக வலியுறுத்தின.
இதுதொடா்பாக கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் டிடிபி தலைவா் பி.எஸ்.பிரசாந்த் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில், கடைசியாக 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் டிடிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாண பத்திரத்தில், சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் சடங்குகள், சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன் பின்னா் புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை’ என்றாா்.