PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸி...
செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
"ஒருகாலத்தில் புகையும் மதுவும் மெதுவான விஷம் என்று சொன்னோம். இப்போது அந்தப் பட்டியலில் மொபைல் போனும் சேர்ந்துவிட்டது.
மெதுவான விஷம் என்பதற்கு காரணம், அவை உடனே கொல்லாது. ஆனால், மனதையும் உடலையும் மெள்ள மெள்ள ஆட்டிப்படைக்கும்'' என்று எச்சரிக்கிற சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர். நித்யா ராகவி, அதுபற்றி விரிவாகப் பேசினார்.

மொபைல் போன் நம் காலத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அது நம்மையும், தொலைவில் உள்ள நம் அன்புக்குரியவர்களையும் உடனடியாக வீடியோ அழைப்பு மூலம் இணைக்கிறது.
ஆனால், எந்தவொரு சக்திவாய்ந்த கருவியையும் போலவே, அதன் தாக்கமும், நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது.
வாழ்க்கையை எளிதாக்கும் அதே சாதனம், அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். உண்மை என்னவென்றால், மொபைல் முற்றிலும் நண்பனோ அல்லது எதிரியோ அல்ல.
அது இருபுறமும் கூர்மையான முனைகள் கொண்ட வாள் போன்றது. கவனத்துடன் பயன்படுத்தும்போது, அது நமக்கு அதிகாரம் அளிக்கிறது. கட்டுப்பாட்டை இழக்கும்போதோ, நம் நல்வாழ்வை கெடுக்கிறது.
மொபைல் போனில் வரும் ஒவ்வொரு அறிவிப்பும் மூளையில் உள்ள டோபமைன் (dopamine) எனும் ஹார்மோனை தூண்டுகிறது. காலப்போக்கில், மூளை இந்தத் தூண்டுதலுக்காக ஏங்கத் தொடங்குகிறது.
அதனால், தேவையில்லாமல்கூட செல்போனை எடுத்து நம்மை சரிபார்க்கத் தூண்டுகிறது. இதனால், நாம் நம் வேலைகளில் முழுமையான ஈடுபாட்டைக் கொடுக்க முடியாமல் போகிறது.

இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருந்து மொபைலை பயன்படுத்துவதால் மெலடோனின் (melatonin) எனும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இதனால் தூக்கம் கெட்டு, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
மொபைல் பயன்பாடு கட்டாயமாக மாறும்போது, அது நடத்தைச் சார்ந்த போதைப்பழக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது எனலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய மொபைல் இல்லையென்றால் அமைதியின்மை, பயம், பதட்டம் அல்லது எரிச்சலை உணர்வார்கள்.
இது 'நோமோபோபியா' (Nomophobia) எனும் நோய் நிலை ஆகும்.

தற்போதுள்ள கல்வி முறை பெரும்பாலும் மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற மின்சாதனப் பொருள்களைச் சார்ந்ததாகவே உள்ளது.
இதனால், மாணவர்கள் தங்கள் கல்விக்கும், பல புதிய செய்திகளை அறியவும் மொபைல் போனையே அதிகம் நம்பியிருக்கிறார்கள்.
தவிர, இரவு நேர மொபைல் போன் பயன்பாடு காரணமாக தூக்கமின்மை, அதன் விளைவாக பள்ளிக்கூடத்தில் கவனமின்மை ஏற்படுகிறது.
இதனால் கல்வியில் நினைவாற்றலும், செயல்திறனும் குறைந்து மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
அளவுக்கு மீறிய செல்போன் பயன்பாடு காரணமாக, சமூகத்துடன் இணைந்து பழகுதல், உரையாடல், நட்பு என வாழ்வின் உன்னதமான பல விஷயங்களை அவர்கள் இழந்துக்கொண்டிருக்கிறார்கள்.
மொபைல் போனிலேயே அதிக நேரத்தைச் செலவிடும்போது, குடும்பத்தினருடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் பேசுவது குறைகிறது. பேச்சுக் குறையக் குறையப் புரிந்துணர்வும் இணக்கமும் குறையும். குறிப்பாகத் தம்பதியர் நடுவில் செல்போன் ஏற்படுத்துகிற பிரச்னை அதிகமாக இருக்கிறது.

2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவு, உலகளவில் கிட்டத்தட்ட 25 சதவிகித இளம் பருவத்தினர் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கல்லூரி மாணவர்களில் சுமார் 35-40 % பேருக்கு, அதிகமான மொபைல் பயன்பாடு காரணமாக படிப்பு மற்றும் மனநிலை பாதிக்கும் அளவுக்கு நிலைமை கடுமையாக உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவைத் தவிர, இரவு நேரத் தொலைபேசி பயன்பாடு உள்ளவர்களுக்கு மோசமான தூக்கத்தரம், அதிக மனச்சோர்வு, பதற்றம் இருப்பதை அதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து கண்டறிந்து தெரிவித்து வருகின்றன.
உடலில் சர்க்கரையின் அளவு மிதமாக இருந்தால் ஆரோக்கியம். அதிக அளவில் சென்றால் தீங்கு.
அது போலவே செல்போனை மிதமான அளவில் பயன்படுத்தி செய்திகளை அறிந்துகொள்ளும்போது நன்மை அளிக்கிறது.
அதுவே, அதிக அளவில் பயன்படுத்தும்போது அடிமைத்தனத்தை உண்டு பண்ணுகிறது.
சமூக ஊடகங்கள் அல்லது பொழுதுபோக்கு பயன்பாடுகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல்.
சாப்பாட்டு மேசை, படுக்கையறை மற்றும் படிக்கும் இடத்திலிருந்து மொபைலை தள்ளி வைத்தல்.
தூக்கத்திலிருந்து எழுவதற்கு மொபைலுக்கு பதிலாக அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துதல்.
தேவையற்ற செயலிகளின் (Apps) அறிவிப்புகளை (Notifications) நிறுத்தி வைத்தல்.
செயலிகளின் (Apps) டைமர்களைப் பயன்படுத்தி அதிக நேரம் மொபைலில் செலவிடுவதைத் தவிர்த்தல்.
புத்தகங்களை வாசித்தல், பாடல்களைக் கேட்டல், விளையாடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற செயல்களால் நாம் மெதுவாக இத்தாக்கத்திலிருந்து வெளிவரலாம்'' என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் நித்யா ராகவி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...