Apple Event: ஆப்பிளின் புதிய 17 சீரிஸ் எப்படி இருக்கிறது? விலை என்ன? விவரங்கள் இ...
நேபாளம்: Gen Z தலைமுறையினரின் இடைக்காலப் பிரதமர் சாய்ஸ்! - யார் இந்த சுசீலா கார்கி?
இந்த வாரத்தின் தொடக்கத்தில், நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்களின் தடைக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினார்கள் அந்த நாட்டின் இளம்தலைமுறையினர்.
இந்தப் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்து, 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்... 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போக, நேபாளத்தில் பிரதமர் ஒலி சமூக வலைதளங்களின் தடைகளை நீக்கினார். அப்போதும் போராட்டம் தணியவில்லை. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார் ஒலி.
தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.
போராட்டத்தை முன்னெடுத்த ஜென் Z தலைமுறையினர், தங்களது சார்பாக ராணுவத்திடம் பேச சுசீலா கார்கியை நியமித்துள்ளனர்.
யார் இந்த சுசீலா கார்கி?
இவர் நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். முக்கியமாக, இவர் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார்.
இவர் தொடர்ந்து ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஆவார்.
இவர் தலைமை நீதிபதியாக இருந்தபோது, அப்போதைய தகவல் மற்றும் தொடர்பு துறை அமைச்சர் ஜெய்பிரகாஷ் பிரசாத் குப்தாவை ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நேபாளத்தின் அதிகார துஷ்பிரயோக விசாரணை ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் லோக்மான் சிங் கார்கி வழக்கிலும் அவரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
2017-ம் ஆண்டு, அப்போதைய நேபாள அரசு இவரை பணிநீக்கம் செய்யப் பார்த்தது. ஆனால், அதற்கு எதிராக, மக்கள் மற்றும் நீதித் துறை சார்ந்தவர்கள் குரல் கொடுக்க, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இவரைத் தான், தற்போது நேபாளத்தின் ஜென் Z மாணவர்கள் இடைக்கால பிரதமராக நியமிக்கப் பரிந்துரைத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் மறுத்த சுசீலா கார்கி, 15 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
இதில் நேபாள ராணுவத் தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலின் பங்கு முக்கியமாகப் பேசப்படுகிறது. ஆக, விரைவில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.