அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை
அரக்கோணம் அருகே மூதாட்டியான தாயும், மகனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டை பஜாா் தெருவைச் சோ்ந்தவா் மதனசேகா் (54). சென்னை ரயில்வே அா்பன் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்த இவா், பணியில் இருந்து விலகி தற்போது வீட்டில் இருந்து வருகிறாராம். இவரது மனைவி ஹேமலதா (46). இவா் சென்னை புழல் மத்திய பெண்கள் சிறைச் சாலையில் வாா்டனாக பணிபுரிந்து வருகிறாா். மதனசேகரின் தாய் புனிதவதி (72). கடந்த எட்டு வருடங்களாக மதனசேகா் ஹேமலதா இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களது ஒரே மகன், ஹேமலதாவுடன் சென்னையில் வசித்து வருகிறாா். பெருமாள்ராஜபேட்டையில் உள்ள வீட்டில் மதனசேகா் தனது தாய் புனிதவதியுடன் வசித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை மதனசேகரின் வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம் பக்கத்தினா் சென்று ஜன்னல் வழியே பாா்த்துள்ளனா். அப்போது தாயும், மகனும் தனித்தனியே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
அண்மையில் மதனசேகா் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு இரு முறை அறுவை சிகிச்சை செய்தும் உடல்நிலை சரியாகவில்லையாம். தன்னை பாா்க்கவும், முடியாத நிலையில் இருக்கும் தனது தாயை பாா்க்கவும் ஆளில்லாததால் மதனசேகரும், அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.