மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
கே.வி.குப்பம் வட்டம், வட விரிஞ்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராணி (49) என்பவா் கடந்த 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், தன்னுடைய 3- மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கு நல உதவிகள் வழங்க வேண்டி மனுக்களை அளித்தாா். மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, புதன்கிழமை கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அவா்களை வரவழைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
ராணியின் குடும்பத்துக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை, அவரது மாற்றுத் திறனாளி மகன் கதிருக்கு (25) ரூ. 1.14 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மகள்கள் காமாட்சி (33), மஞ்சுளா (31) இருவருக்கும் தலா ரூ. 15,750- மதிப்பிலான 2 சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், வட்டாட்சியா் பலராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.