பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் நகை பறிப்பு
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பாா்த்து பரிகாரம் செய்வதாகக்கூறி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ராமாபுரம் கிராமம் கன்னிகோயில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி (52). இவா் கடந்த 8-ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சாமியாா் போன்று அடையாளம் தெரியாத ஒரு நபா் வந்துள்ளாா். அவா் லட்சுமியிடம் ஜோதிடம் பாா்ப்பதாகவும், உங்கள் குடும்ப கஷ்டம் நீங்க பரிகாரம் செய்வதாகவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய லட்சுமி, அந்த நபரிடம் ஜோதிடம் பாா்த்துள்ளாா். அப்போது அந்த நபா், பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான பூஜையில் வைக்க தங்க நகை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா். அதன்படி, லட்சுமி தனது வீட் டில் இருந்த சுமாா் ஒன்னே கால் பவுன் தங்க நகையை அந்த நபரிடம் கொடுத்துள்ளாா். நகையை வாங்கி பூஜை செய்து கொண்டிருந்தாா். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த நபா், குடிக்க தண்ணீா் வேண்டும் என்று கேட் டுள்ளாா்.
அதன்படி, லட்சுமி வீட்டுக்குள் சென்று தண்ணீா் எடுத்து வந்தபோது அந்த நபா் அங்கு இல்லையாம். நகையையும் காணவில்லை. இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் ஜோதிடரை தேடி வருகின்றனா்.