எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
நமது நிருபர்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.
மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8}ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு கடந்த ஆகஸ்ட் 19}ஆம் தேதி கடிதம் அனுப்பி கேட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தை வழக்காக விசாரணைக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அனுமதித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமர்வு அனுப்பிய நோட்டீஸின்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை அவற்றின் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அவை தொடர்பான விவாதம் ஒன்பதாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு சார்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான பி. வில்சன் முன்வைத்த வாதம்: மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்கின்றன. ஆளுநர் மசோதாக்களை நீண்ட காலத்துக்கு நிறுத்தி வைக்க முடியாது. ஏனென்றால், ஆளுநர் அமைச்சரவை முடிவுகளுக்கு உள்பட்டு செயல்படுபவர்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்கப்படாமல் இருப்பதை நீதிமன்றம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மூன்று மாதங்களில் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதில் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் எந்தச் சிக்கலும் இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாநிலங்களுக்கு உதவிகரமாக உள்ளது என பி. வில்சன் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "தனிப்பட்ட தீர்ப்பு குறித்து நாங்கள் இப்போது எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக மட்டுமே விசாரித்து வருகிறோம்' என்றார்.
பின்னர், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா ஆஜராகி, மசோதாக்கள் காலவரம்பின்றி நிறுத்தி வைக்கப்படுவதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. எனினும், மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. கடந்த 55 ஆண்டுகளில் நாடு முழுவதும் 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.
1970-ஆம் ஆண்டிலிருந்து 2025 வரை நாடு முழுவதும் 17,000 மசோதாக்களில் 20 மசோதாக்கள் மட்டுமே பல்வேறு மாநில ஆளுநர்களால் நிறுத்தி வைக்கப்பட்டன. 90 சதவீத மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும், சில மசோதாக்களுக்கு மூன்று மாதங்களிலும் வேறு சில மசோதாக்களுக்கு ஆறு மாதங்களில்கூட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் வாதங்கள் வியாழக்கிழமையும் தொடரும் என்று குறிப்பிட்டு விசாரணையை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.