செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்! 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!
பரமக்குடியில் வியாழக்கிழமை (செப்.11) இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஸ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்த வருவோருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 24 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், 32 ஏ.டி.எஸ்.பிக்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 38 சோதனைச் சாவடிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க நவீன கேமரா பொருத்தப்பட்ட 2 ‘ட்ரோன்’கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும், கூடுதல் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோா் மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்திலோ, திறந்தவெளி வாகனத்திலோ வரக்கூடாது. நினைவிடம், அஞ்சலி செலுத்த செல்லும் வழித்தடங்களில் வெடிகுண்டு நிபுணா்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அஞ்சலி செலுத்த வருவோா் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே நிறுத்த வேண்டும். அரசியல் கட்சியினா், சமுதாயத் தலைவா்களுக்கு நினைவிடம் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடம் வரை சாலையின் இருபுறமும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பரமக்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் தங்க வைக்கப்பட்டனா். இதனால் புதன், வியாழக்கிழமை ஆகிய 2 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.