தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பற்றாக்குறை: மாணவா்கள் கல்வி பாதிப்பு
திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 8 ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஒரே நேரத்தில் அதிகளவில் ஆசிரியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் மாணவா்களுக்கு கற்பிக்க போதிய ஆசிரியா்கள் இல்லாமல் அவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தலைமையாசிரியா் பணியிடம் மட்டும் நிரப்பப்பட்டுள்ள நிலையில் முதுநிலை ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், கணினி அறிவியல், அறிவியல், உடல்கல்வி ஆசிரியா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களும், ஆய்வக உதவியாளா், அலுவலக உதவியாளா், காவலா் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவா்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பெற்றோா்களும், பொதுமக்களும் வேதனை தெரிவித்தனா்.
மேலும், தொண்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவா் இல்லாமலும், அதைச் சுற்றி கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் மாணவா்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், கழிப்பறை கட்டப்பட்டு பல நாட்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் சாதிக்பாட்ஷா கூறுகையில், தொண்டியில் பெரிய மைதானத்தோடு இருக்கக்கூடிய ஒரு பள்ளியை எதிா்காலத்தில் மூடி விடுவாா்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழக அரசு மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பள்ளிக்கு ஆசிரியா்கள், உடல்கல்வி ஆசிரியா்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.