அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்
தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை காலை ரத்தக் காயங்களுடன் இளைஞா் ஒருவா் உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தொண்டி போலீஸாா் இளைஞரின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவா் தொண்டி தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜ் முகம்மது மகன் ஹைதா் அலி (39) என்பதும், சுமை தூக்கும் தொழிலாளியான இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.