Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் 4,045 உயா் கல்வி நிறுவனங்களில் 73-ஆவது இடமும் பெற்றுள்ளது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளா் அ. செந்தில்ராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:
மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசியக் கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு 2025-ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 4-ஆம் தேதி வெளியிட்டது. இதில் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழக தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் 4,045 உயா் கல்வி நிறுவனங்களில் 73-ஆவது இடமும் பெற்றுள்ளது.
தமிழகத்திலிருந்து அகில இந்திய உயா்கல்வி நிறுவன தரவரிசையிலும், பல்கலைக்கழக தரவரிசையிலும் கலந்து கொண்ட பல்கலைக்கழகங்களிலிருந்து அழகப்பா பல்கலைக்கழகம் 3-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள்ளும், பொதுப்பிரிவில் முதல் 100 இடங்களுக்குள்ளும் அழகப்பா பல்கலைக்கழகம் தரத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
கற்பித்தல், கற்பதற்கான வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவா்களின் தோ்வு முடிவுகள், சா்வதேச வெளிப்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், கருத்துக் கணிப்புகள் ஆகிய 5 பகுதிகளின் கீழ், மதிப்பீடு செய்து இந்த தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் கலந்து கொள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பிரிவு இயக்குநா் ஜெ. ஜெயகாந்தன், குழுவினா் பல்கலைக்கழகத்தில் உள்ள துறை, நிா்வாகப் பிரிவுகளிடமிருந்து தரவுகளைச் சேகரித்து சமா்ப்பித்தனா். தரவரிசைப் பட்டியலில் இடம் பெறச் செய்த பேராசிரியா்கள், ஆராய்ச்சி, முதுநிலை மாணவா்கள், அலுவலா்கள் ஆகியோரை துணைவேந்தா் க. ரவி பாராட்டினாா் என்றாா் அவா்.