ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
Doctor Vikatan: தினசரி தலைக்குக் குளிக்க வேண்டுமா, வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா?
Doctor Vikatan: ஆண்கள் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள். பெண்களும் தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா... வெறும் தண்ணீரில் குளித்தால் போதுமா... ஷாம்பூ தேவையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

தினமும் தலைக்குக் குளிப்பது என்பது நிச்சயமாக நல்ல விஷயம்தான். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். தினமும் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு போகும், முடி உதிரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகள்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருமே, வாரத்தில் மூன்று முறையாவது தலைக்குக் குளிக்க வேண்டியது அவசியம். சிலர் தினமும் ஷாம்பூ உபயோகித்து தலைக்குக் குளித்தால் பிரச்னை என்ற எண்ணத்தில் வெறுமனே தலைக்குக் குளிப்பார்கள். அது தவறு.
இன்னும் சொல்லப் போனால் ஷாம்பூ இல்லாமல் தலைக்குக் குளிக்காதீர்கள். அதே சமயம், மைல்டான ஷாம்பூ உபயோகித்து அது முடியிலிருந்து முழுமையாக நீங்கும்படி நன்றாக அலசிக் குளித்துவிட வேண்டும்.
வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்வது என்பது நல்ல விஷயமே இல்லை. வெறும் தண்ணீரில் அலசும்போது, தண்ணீர், தலையில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் எல்லாம் சேர்ந்து, முடியில் பிசுபிசுப்பு ஏற்படும்.
மண்டைப்பகுதியின் பிஹெச் அளவை மாற்றி, கூந்தலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். எனவே, மைல்டான ஷாம்பூ உபயோகிப்பதுதான் சரியானது.

ஹெல்மெட் பயன்பாடு, வாகனம் ஓட்டுவது, வெளியே அலைகிற வேலை, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற காரணங்களால் ஆண்களுக்கு தலைமுடி சீக்கிரமே அழுக்காகும். அவர்களுக்கு தினமும் தலைக்குக் குளிப்பது அவசியமாகிறது.
அதுவே, கூந்தலின் நீளம் கருதி, தினசரி தலைக்குக் குளிப்பது பெண்களுக்கு சாத்தியமில்லை என்பதால், வாரத்தில் மூன்று நாள்களாகக் குறைத்துக்கொள்ளலாம். அவர்களும் தினமும் தலைக்குக் குளிக்க முடியும் என்று நினைத்தால் அதைச் செய்வது சிறப்பானதுதான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.