ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்
அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவகங்கை அருகே பனங்காடியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளிலிருந்து தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈா்த்து, 17,613 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உறுதியளித்துள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் ஆதாயம் தேட அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அவா்களின் உண்மையான முகத்தை வெளிக்கொணரும் வகையிலும், ஆா்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின்படி பாஜக நடத்தும் அரசியல் சூதாட்டம் குறித்தும் மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் 400 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதி வருகிறேன். இந்தப் புத்தகத்தை தமிழக முதல்வரை வைத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.
எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் இரும்புக் கோட்டையாக உருவாக்கிய அதிமுகவை தற்போது எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தின் மூலம் மக்கிய கோட்டையாக மாற்றி வருகிறாா். மூத்த தலைவா் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கடந்த 2016-இல் சட்டப்பேரவையில் நான் வலியுறுத்திய போது, அப்போது ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி தற்போது நாடகமாடுகிறாா்.
அதிமுகவை வெளியிலிருந்து வந்து யாரும் பிரிக்கவோ, அழிக்கவோ வேண்டாம். அதை அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் என்று தெரியாது. தவெக தலைவா் விஜய் சமூக வலைதளங்கள் மூலமாகவே அரசியல் நடத்தி விடலாம் என நினைக்கின்றாா் என்றாா் அவா்.