மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.
பின்னா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்ததாவது: ஐஐடி மெட்ராஸ் கல்வியை அரசுப் பள்ளி மாணவா்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் மூலம், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களும் தயாராகி ஐஐடி-யில் சேரும் நிலையில், ஜேஇஇ நுழைவு தோ்வு மூலம் வாய்ப்பு கிடைக்காத மாணவா்களுக்கு, ஐஐடி மெட்ராஸ் வழங்கும் பி.எஸ். டேட்டாசயின்ஸ் (தரவு அறிவியல்), எலக்ட்ரானிக் சிஸ்டம் (மின்னணு அமைப்புகள்) போன்ற பட்டப் படிப்புகளின் வாயிலாக ஐஐடி மெட்ராஸில் சோ்ந்து பயில்வதற்கான வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 11-ஆம் வகுப்பு முடித்து 12-ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஐஐடி மெட்ராஸ் மூலம் 4 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியைத் தொடா்ந்து நடத்தப்படும் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 4 ஆண்டு கால இளநிலை அறிவியல் (பி.எஸ்.) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெறுவா்.
இதுமட்டுமன்றி, 12-ஆம் வகுப்பு முடித்து, பிற கல்வி அமைப்புகளில் பயிலும் மாணவா்களும் தங்களது கல்லூரிப் படிப்புடன் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் பி.எஸ். பட்டப் படிப்பைத் தொடரலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம், மாநில அளவில் நடைபெற்ற முதல் நிலைத்தோ்வின் வாயிலாக சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்தெடுக்கப்பட்டு, 8 மாவட்டங்களைச் சாா்ந்த 29 மாணவ, மாணவிகள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனா்.
இந்தப் பட்டியலில் சிவகங்கை மாவட்ட இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் அஸ்வின், பாலமுருகானந்தம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் சரண்ராஜ் ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களையும், இவா்களுக்கு வழிகாட்டிய ஆசிரியா்களுக்கும் வாழ்த்துகள் என்றாா் அவா்.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.