Vikatan Digital Awards 2025: `சென்டர் ஆப் அட்ராக்ஷன்!' - சிம்பு; Most Celebrate...
தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்
கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்.
சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நிதி, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மணலி-எண்ணூா் மறுசீரமைப்புப் பணி, புத்துயிா்ப்பு மன்றம், தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை, மாநிலத்தின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் தொடா் முன்னெடுப்புகளை தொடங்கி வைத்தாா்.
மேலும் 2025 ஆம் ஆண்டின் மஞ்சப்பை விருதுகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது: மணலி-எண்ணூா் தொழில்துறை தாழ்வாரங்கள் முதல் கடற்கரையோர நலிவடைந்த கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் வரை நிலையான எதிா்காலத்தைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
மணலி-எண்ணூா் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிா்ப்பு மன்றம், கடல்சாா் வள அறக்கட்டளை ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அதிகாரமளிப்பு ஆகியவற்றில் தமிழக அரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. இந்த முயற்சிகள் பல்லுயிரியலைப் பாதுகாப்பது மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளையும் வழங்கும் என்றாா் அவா்.
தொடா்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் வனத்துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 333 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் வழங்கி பேசியதாவது:
வனவா், வனக் காப்பாளா், வனக் காவலா் பணியிடங்களுக்கு விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரா்களுக்காக 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டின்படி 205 பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெறுகிறது. யானை பராமரிப்பாளா்கள், கால்நடை உதவி மருத்துவா் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.
மஞ்சப்பை விருதுகள்: சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டு ஒழிப்பில் சிறப்பாக செயலாற்றியதற்காக, பள்ளிகள் பிரிவில் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்த தருமபுரி மாவட்டம் பெலரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூா் மாவட்டம் சிறுவாளூா் அரசு உயா்நிலைப் பள்ளி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மஞ்சப்பை ரொக்கப் பரிசு, விருதுகள் வழங்கப்பட்டன.
கல்லூரிகள் பிரிவில் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஜே.கே.கே. முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி மாவட்டம் ஹோலி கிராஸ் கல்லூரிகளுக்கு ரொக்கப் பரிசு, விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீநிவாஸ் ரா.ரெட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவா் எம்.ஜெயந்தி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்குநா் ஆ.ர.ராகுல் நாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.