Vikatan Digital Awards 2025: `கலந்து கட்டும் தமிழ் டெக்!' - Best Tech Channel Wi...
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர்,
"அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பேருந்தை எடுத்துக் கொண்டு சுற்றுப்பயணத்திற்குச் சென்றுள்ளார். அப்போது ஒரு பிரசாரத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டியுள்ளனர். மேலும் சில இடங்களில் ஆம்புலன்ஸை நிறுத்தி ஓட்டுநர்களை அடித்துள்ளனர்.
"உங்களுடைய அதிமுக கட்சி ஆம்புலன்ஸில் செல்லும் நிலைமையில் இருக்கிறது. பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியு-வில் இருக்க வேண்டிய நிலைமை வரும். கடைசியில் உங்களை காப்பற்ற நாங்கள்தான் வர வேண்டும்" என்று கூறினேன். இதைச் சொன்னதற்கு, கொலை மிரட்டல் விடுப்பதாக இபிஎஸ் கூறுகிறார்.
நான் அவரைச் சொல்லவில்லை. அதிமுகவைத்தான் சொன்னேன். உண்மையில் சொல்கிறேன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் மன நலத்துடன் வாழ வேண்டும். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக நீங்கள்(எடப்பாடி பழனிசாமி) மட்டும்தான் இருக்க முடியும். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியமும் அதுதான். எங்களுக்கும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும். அந்த இயக்கத்தை வழிநடத்துவதற்கு உங்களுக்கு மட்டும்தான் தகுதி இருக்கிறது.
அதிமுகவினர் இதை ஒத்துக்கொள்வார்களா எனத் தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன், நீங்கள்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்" என்று பேசியுள்ளார்.