ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!
ஜம்மு - காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மேராஜ் மலிக்கின் கைதுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் டோடா சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மேராஜ் மலிக். இவர், காவல் துணை ஆணையர் உள்பட அரசு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அரசு அதிகாரிகள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மேராஜ் மாலிக்கை ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து, டோடா பகுதியில் மேராஜின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 163 பிஎன்எஸ்எஸ் (144 சிஆர்பிசி) தடை சட்டத்தின் கீழ் டோடா பகுதியில் ஊரடங்கை அமல்படுத்தி, ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டுள்ள முதல் சட்டப்பேரவை உறுப்பினர் மேராஜ் மலிக் ஆவார்.
இந்தச் சட்டத்தின்கீழ், எவ்வித புகாரும் இல்லாமல் ஒருவர் மீது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதி தடுப்புக்காவலில் இருக்கச் செய்யலாம்.