ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்டத்தை பயன்படுத்தி, சப்தாரி பகுதிக்குட்பட்ட ராஜ்பிராஜ் சிறையில் இருந்த கைதிகள் சிறைச்சாலையின் ஒரு பகுதியில் தீவைத்துள்ளனர்.
மொத்தம் 397 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து சிலர் தப்பியுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிறை கண்காணிப்பாளர் கங்கா யோகி தெரிவித்துள்ளார்.
மேலும், சிறையினுள் கைதிகள், சிறைச்சாலைக்கு தீயிட்டு எரித்ததையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது,
''சிறையில் இருந்த கைதிகள் சிறைச்சாலையினுள் ஒரு பகுதியை தீயிட்டு எரித்தனர். அவர்களை சிறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முயன்றனர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி சிறையில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், 397 பேர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து சில கைதிகள் தப்பியோடியுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
சிறையின் இரண்டாம் பிரிவுக் கட்டடத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் தப்பியோடியவர்களை கண்காணிப்பதற்கும் நேபாள ராணுவம், ராணுவ ஆயுதப் படை, காவல் துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
ராஜ்பிராஜ் சிறையைத் தொடர்ந்து, பிர்குஞ்ச் பகுதியிலுள்ள சிறைக்கைதிகளும் போராட்டத்தைப் பயன்படுத்தி தப்பியோட முயன்றுள்ளனர். இதற்காக சிறையின் தெற்கு சுவரை அவர்கள் தகர்க்க முயன்றுள்ளனர்.
காவல் துறையில் பெரும்பாலானோர் போராட்டம் நடைபெற்று வந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததால், சிறையின் சுவரை உடைத்து கைதிகள் தப்ப முயன்றுள்ளனர்.
எனினும், கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில், சிலர் படுகாயம் அடைந்தனர். சிறையில் சேதமடைந்த பகுதிகள் சீர்செய்யப்பட்டு வருகின்றன.
நேபாளத்தில் முகநூல், வாட்ஸ்ஆப், எக்ஸ் போன்ற சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊழலுக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட இளம் தலைமுறையினர் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் காவல் துறையினர் கலைக்க முயன்றனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது.
இதையும் படிக்க | அயோத்தி கோயில் குறித்து பெருமையடையாதவர் இந்தியரா? யோகி ஆதித்யநாத்!