ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்
ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்
ஆவடி, செப். 9: திருவேற்காடு - நூம்பல் சாலையை சீரமைக்க ரூ.1.20 கோடி ஒதுக்கி செய்து 9 மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடியில் இருந்து நூம்பல் பிரதானச் சாலை சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். நூம்பல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இருந்து சென்னை துறைமுகம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மூலம் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும், துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்படும் ராட்சத இயந்திரங்கள், கிரானைட் கற்கள் இந்த பகுதியில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் இந்த பகுதியில் கனரக வாகனங்களின் போக்குவரத்து பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, போரூர், ஐயப்பன்தாங்கல், மதுரவாயல், வானகரம், நூம்பல், துண்டலம், செட்டியார்அகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.
இந்த சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மான்யமாக ரூ.80 லட்சமும், பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.40 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1.20 கோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் பிறகு இச்சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் அவ்வப்போது பெய்யும் பலத்த மழையால் சாலை முழுவதும் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றது. மேலும் இந்த கழிவு நீர் அந்தப் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சாலை பயன்படுத்த முடியால் பல கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, திருவேற்காடு- நூம்பல் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் பலனில்லை. தினமும் தொழிலாளர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டே சென்று வருகின்றனர்.
அடிக்கடி பெய்து வரும் மழையால் கழிவுநீரும் மழைநீரும் கலந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் செல்லுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.