செய்திகள் :

2 ஏக்கர், ரூ.5,44,000... சம்பங்கி சாகுபடியில் வளமான வருமானம்…முன்னாள் அரசு ஊழியரின் இயற்கை விவசாயம்!

post image

விவசாயத்தில் தினசரி வருமானம் பார்க்க, காய்கறிகள் முதன்மைத் தேர்வாக இருந்து வருகின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக இருப்பவற்றில், மலர் சாகுபடிக்கு முதன்மை இடமுண்டு. ஆண்டு முழுவதும் விற்பனை வாய்ப்பு இருப்பதால், சம்பங்கி சாகுபடியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தேவாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கு.சின்னப்பா, தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடியில் நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

ஒரு காலைப்பொழுதில் சின்னப்பாவின் சம்பங்கித் தோட்டத்துக்குச் சென்றோம். பராமரிப்புப் பணியிலிருந்த சின்னப்பா, உற்சாகத்தோடு வரவேற்றதோடு, தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சொந்த ஊர் இதுதான். தேவாமங்கலம் வேளாண் கூட்டுறவு சங்கச் செயலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுட்டேன். அதுக்குப் பிறகு, விவசாயத்துல முழு மூச்சா ஈடுபட முடிவு செஞ்சேன். குடும்ப சொத்தா 7 ஏக்கர் புஞ்சை நிலமிருக்கு. இந்த 7 ஏக்கர் நிலத்துல, 3 ஏக்கர் பள்ளமான பகுதியில அமைஞ்சிருக்கு. அந்தப் பகுதியில 350 அடி ஆழத்துக்கு போர்வெல் போட்டேன். அதுமூலமா கிடைச்ச தண்ணியை வெச்சு, 7 ஏக்கருக்கும் தண்ணி பாய்ச்சுறேன்.

சம்பங்கி செடி...

4 ஏக்கர்ல சவுக்கு, தைல மரத்தைப் பயிரிட்டிருக்கேன். மரப்பயிர்கள்ல வருமானம் கிடைக்க 4 அல்லது 5 வருஷம் ஆயிடும். அதனால, தினசரி வருமானம் கிடைக்குற மாதிரி 3 ஏக்கர்ல, ஏதாவது, சாகுபடி செய்யலாம்னு யோசிச்சேன். நெல், சிறுதானியங்கள் மாதிரியான பயிர்களை சாகுபடி செய்ய, எங்க பகுதில வேலையாள்கள் அவ்வளவா கிடைக்கிறதில்ல. அப்படியே சாகுபடி செஞ்சாலும், உழைப்புக்கும் முதலீடுக்கும் ஏத்த லாபம் கிடைக்கிறதில்ல.

ஒருமுறை பயிர் செஞ்சா, நீண்ட நாள்களுக்கு தினசரி வருமானம் கிடைக்குற மாதிரி ஒரு பயிரை சாகுபடி செய்யலாம்னு தேடினதுல... சம்பங்கி நல்ல தேர்வா இருந்துச்சு. இடுபொருள் செலவைக் குறைக்கணும்னுங்கற நோக்கத்துல ரசாயன உரங்களைத் தவிர்த்துட்டு, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி சம்பங்கி சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சேன். இதுக்காக அரியலூர் கே.வி.கே மற்றும் சில விவசாயிகள்கிட்ட இருந்து இயற்கை இடுபொருள்களை வாங்கினேன்.

சம்பங்கி சாகுபடியைப் பொறுத்தவரை களிமண்ணைத் தவிர, அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரும். தண்ணி வசதி இருந்தால், எந்த மாசத்துல வேண்டுமென்றாலும் நடவு செய்யலாம். சம்பங்கி நடவு செய்றதுக்கு முன்னாடியே சில பண்ணைகளுக்குப் போய், அந்த விவசாயிகள் சொன்ன தகவல்களைக் கேட்டுகிட்டேன். 5 வருஷத்துக்கு முன்ன 2 ஏக்கர்ல சம்பங்கி சாகுபடியைத் தொடங்கினேன்.

எரு

நடவு செய்த, 150-வது நாள்ல இருந்து மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. முதல் தடவை 5 கிலோ பூக்கள் கிடைச்சது. அதுக்குப் பிறகு, படிப்படியா மகசூல் அதிகரிக்க ஆரம்பிச்சது. ஒவ்வொரு குருத்துலயும் 10-லிருந்து 15 மொட்டுகள் வரை வந்தது. ஒரு குருத்துல பூத்து முடிச்ச பிறகு, அடுத்த குருத்துல இருந்து புதிய மொட்டுகள் வர ஆரம்பிச்சது. இப்படியே தொடர்ந்து பூத்துக்கிட்டே இருந்துச்சு. பூக்களோட எண்ணிக்கையும் படிப்படியா அதிகரிச்சது.

2 ஏக்கர்ல இருந்து ஒரு நாளைக்கு சராசரியா 18 கிலோ பூக்கள் கிடைக்குது. சம்பங்கிக்கு சீஸன் கிடையாது. வருஷம் முழுக்க பூக்கும். பனிக்காலங்கள்ல மட்டும் விளைச்சல் குறைவா இருக்கும். மழைக் காலத்துலயும் நல்லா பூக்கும். பூக்களை தினசரி பறிச்சிடறோம். ஒருநாள் பறிக்காம விட்டாலும், அடுத்த நாள், பூக்கள்ல இருக்குற வெள்ளை நிறம் குறைஞ்சு பழுப்பு நிறமா மாறிடுது. இப்படி மாறிட்டா... விற்பனை செய்ய முடியாது.

பாசனத்தைப் பொறுத்தவரை 5 நாள்களுக்கு ஒரு முறை பாசனம் செஞ்சுட்டு வர்றோம். வாய்க்கால் பாசனமும் செய்யலாம். ஸ்பிரிங்களர் மூலமாகவும் பாசனம் செய்யலாம். தண்ணி கிடைக்குறதைப் பொறுத்து, நான் ரெண்டு முறையிலயும் பாசனம் செய்றேன்.

பூக்களைப் பறிக்க 1 கிலோவுக்கு 7 ரூபாய் கூலி. பெண்கள்தான் பூக்களைப் பறிக்க வர்றாங்க. பறிச்ச பூக்களை மூட்டைப் பிடிச்சு கும்பகோணத்துல உள்ள பூ வியாபாரிகளுக்கு அனுப்பிடுவேன். அவங்க தேவையான அளவு எடுத்துக்கிட்டு, மீதியை வெளியூர் வியாபாரிகளுக்கு அனுப்பிடுவாங்க. ரெண்டு நாள் கழிச்சு பணத்தை அனுப்பிடுவாங்க” என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.

சம்பங்கி செடி...

“தினமும் சராசரியாக 18 கிலோ வீதம், ஒரு மாசத்துக்கு 540 கிலோ பூக்கள் கிடைக்குது. வருஷத்துக்கு 6,480 கிலோ பூக்கள் கிடைக்குது. சாதாரண நாள்கள்ல ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமா 100 ரூபாய் வரை விலை கிடைக்குது. பண்டிகை, முகூர்த்தம் மற்றும் கோயில் திருவிழா காலங்கள்ல 100-லிருந்து 150 ரூபாய் வரை விற்பனையாகுது. அந்த வகையில, போன வருஷம் என்னுடைய பூக்களுக்கு 1 கிலோவுக்குச் சராசரியா 84 ரூபாய் விலை வீதம், 6,480 கிலோ பூக்களுக்கு 5,44,320 ரூபாய் வருமானம் கிடைச்சது. உழவு, எரு, பாசனம், அறுவடை, போக்குவரத்துனு எல்லா செலவுகளும் போக... 3,00,910 ரூபாய் லாபமா நின்னுச்சு. எல்லா வேலைகளுக்கும் ஆள்களை வெச்சுதான் விவசாயம் செய்றேன். அதனால செலவு கொஞ்சம் கூடுதலா ஆகுது. முதல் முயற்சியிலேயே இந்தளவுக்கு லாபம் கிடைச்சதை நிறைவாத்தான் உணர்றேன்.

மல்லி, முல்லை, காக்கரட்டான் போட்டுட்டு இருந்த விவசாயிகள்கூட, இப்ப சம்பங்கிக்கு மாறிட்டு இருக்காங்க. ஏன்னா, மற்ற பூக்கள் சீஸன்லதான் பூக்கும். ஆனா, சம்பங்கி வருஷம் முழுக்க பூக்குது. நிலையான விலையும், விளைச்சலும் கிடைக்குறதுனால சம்பங்கியை நிறைய பேரு விரும்புறாங்க. முதல்முறையா இயற்கை விவசாயத்துல பயிர் செஞ்சேன். போகப் போக இன்னும் மகசூல் அதிகரிக்கும்னு எதிர்பார்க்குறேன். இந்தத் தடவை, கூடுதலா ஒரு ஏக்கர்ல சம்பங்கி நடவு செஞ்சிருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சின்னப்பா

செல்போன்: 98423 05085.

சம்பங்கி வயல்

சம்பங்கி பூக்களிலிருந்து எண்ணெய்

சம்பங்கியின் தாயகம் மெக்ஸிகோ. வெண்மை, இளஞ்சிவப்பு. அடர்சிவப்பு எனப் பல நிற சம்பங்கிகள் உள்ளன. பசுமையான தண்டுகளும், கூரான கத்தி போன்ற இலைகளும் கொண்ட சம்பங்கியின் ஒவ்வொரு குருத்திலும் ஒரு பூ, இரண்டு பூக்கள் எனப் பூப்பதால், இதை மெக்ஸிகன் சிங்கிள், மெக்ஸிகன் டபுள் என்றும் அழைக்கிறார்கள். மெக்ஸிகன் டபுள் ரகத்துக்கு கிராக்கி அதிகம். சமீபகாலமாக சம்பங்கியிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் வளர்ந்து வருகிறது. 1,000 கிலோ எடையுள்ள பூக்களிலிருந்து, 1 கிலோ தூய வாசனை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த வாசனை எண்ணெய்க்கு வர்த்தக வாய்ப்பு அதிகம் உள்ளது.

தண்ணீர் தேங்கக் கூடாது

“சம்பங்கியில வேர் அழுகல் நோய் தாக்குதல் அதிகம். இதைப் பற்றி பேசும் சின்னப்பா, வேர் அழுகல் நோய் வராம தடுக்கணும்னா, மழைக் காலத்துல வயல்ல தண்ணி தேங்கக் கூடாது. இதைச் செஞ்சா வேரழுகல் நோயைத் தடுத்துடலாம். சம்பங்கி நடவு செய்யத் தேர்ந்தெடுக்கும் நிலம் வடிகால் வசதி கொண்டதா இருக்கறது நல்லது. மாவுப்பூச்சி உள்ளிட்ட பூச்சித்தாக்குதல் வந்தா... ஐந்திலைக் கரைசல் தெளிச்சிக் கட்டுப்படுத்தலாம்” என்கிறார்.

களைகளைக் குறைக்கும் மல்ச்சிங் ஷீட்!

“சம்பங்கி சாகுபடியைப் பொறுத்தவரை அதிக களைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான விஷயம் என்பதோடு, செலவு பிடித்த விஷயமும்கூட. இதற்கு மல்ச்சிங் ஷீட் பயன்படுத்தும் சின்னப்பா, விதைப்புச் செய்றதுக்கு முன்ன மல்ச்சிங் ஷீட்டைப் பாத்திகள் மேல பரப்பணும். பிறகு, அந்த ஷீட்ல குறிப்பிட்ட இடைவெளியில துளைகள் இட்டு, விதைக்கிழங்குகளை நடவு செய்யணும். இப்படிச் செய்தா... களைகள் முழுமையாவே கட்டுப்படுத்தப்படுது.

நான் 50 நாள்களுக்கு ஒரு களை எடுக்குறேன். இதனால, களை எடுக்குற செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியுது. அதேபோல சம்பங்கிக்கு மண்ணுல ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கணும். மல்ச்சிங் ஷீட் விரிச்சு இருக்குறதால மண்ணோட ஈரப்பதம் தக்க வைக்கப்படுது” என்கிறார்.

சம்பங்கித் தோட்டத்தில் சின்னப்பா

சின்னப்பாவின் சாகுபடி முறைகள், படமாக...

முதலில் கொக்கிக் கலப்பையைக் கொண்டு இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். ஏக்கருக்கு 5 டன் என்ற கணக்கில் இரண்டு ஏக்கருக்கு 10 டன் தொழுஉரத்தைப் பரப்ப வேண்டும். ரோட்டாவேட்டர் கலப்பை மூலமாக ஒரு சால் உழவு அடித்து, நிலத்தைச் சமன்படுத்த வேண்டும். 2 அடி அகலம், 1 அடி உயரம், 1 அடி இடைவெளி கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகள் மீது பாலித்தீன் ஷீட் மூடாக்குப் போட வேண்டும்.

அதன் பிறகு, பாத்திகள் மீது அரையடி இடைவெளியில் 4 அங்குல பைப் மூலமாகக் குழி போட்டு, முளைவிட்ட விதைக் கிழங்கை ஒரு குழிக்கு ஒன்று வீதம் நடவு செஞ்சு, தெளிப்பு நீர் (ஸ்பிரிங்ளர்) மூலம் பாசனம் செய்ய வேண்டும். இரண்டு ஏக்கருக்கு பிரஜ்வல் ரகச் சம்பங்கி விதைக்கிழங்குகள் 1,300 கிலோ தேவைப்படும். விதைக்கிழங்குகளை 20 நாள்கள் நிழலில் உலர்த்தி, முளைப்பு வந்த பிறகு, நடவுக்குப் பயன்படுத்த வேண்டும் (இவர் உள்ளூர் விவசாயியிடம் 1 கிலோ 40 ரூபாய் வீதம் வாங்கியுள்ளார். ஒரு கிலோவுக்கு 15-லிருந்து 20 விதைக்கிழங்குகள் இருக்கும்).

7-வது நாளுக்குப் பிறகு முளைப்பு விட்டு, செடிகள் துளிர்த்து வளரத் தொடங்கும். 15-வது நாள் 50 கிலோ செறிவூட்டப்பட்ட எருக் கலவையை (50 கிலோ எருவுடன் தலா 1 கிலோ சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களைக் கலந்து 48 மணிநேரம் வைத்தால், செறிவூட்டப்பட்ட எரு தயார்) செடிக்கு 1 கைப்பிடி வீதம் கொடுக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து, 100 லிட்டர் தண்ணில 2.5 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் மீன் அமிலம், 1 லிட்டர் ஐந்திலைக் கரைசல் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். இந்தக் கரைசலை 15 முதல் 30 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். 50-வது நாள் களை எடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 50 நாள்களுக்கு ஒரு முறை எனப் பூக்கள் பூக்கும் வரை களை எடுக்க வேண்டும்.