மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 24 கண்காணிப்பாளா்கள், 170 துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
38 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 48 வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். 600 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு, பரமக்குடி நகா் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், ட்ரோன் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருவோா் மாவட்ட நிா்வாகம், அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். மேலும், இரு சக்கர வாகனங்கள், திறந்தவெளி வாகனங்களில் வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.