இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது
ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா்.
ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில்,
காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் காவலா்கள் நகர காவல் எல்லைக்கு உள்பட்ட காமராஜா் சிலை அருகே குற்றத் தடுப்பு சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் போலீஸாரைக் கண்டதும் வேகமாக திரும்பிச் சென்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், அவா் வெம்பாக்கம் வட்டம், திருப்பனங்காடு கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (50) எனத் தெரிய வந்தது. மேலும், இவா் மீது காஞ்சிபுரம், கண்ணமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் இரு சக்கர வாகனத் திருட்டு சம்பந்தமாக வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரணை செய்ததில் ஆரணி நகர காவல் நிலையத்துக்கு உள்பட்ட இரு இடங்களில் இரு சக்கர வாகனம் திருடியதை ஒப்புக்கொண்டாா். இதனால் இரு சக்கர வாகனங்களை மீட்டு வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.