இலக்கிலிருந்து தப்பிய சல்மான் கான்; அதன் பிறகே டார்கெட்டான பாபா சித்திக்- வெளியான அதிர்ச்சி தகவல்கள்
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த மாதம் 12ம் தேதி இரவு மூன்று பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பாக இது வரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்ட சிவகுமார் என்பவர் உத்தரப்பிரதேசத்தில் தலைமறைவாக இருந்தார். அவரை மும்பை போலீஸார் உத்தரப்பிரதேசத்திற்கு சென்று வாரக்கணக்கில் தங்கி இருந்து கைது செய்து அழைத்து வந்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய உண்மைகள் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறுகையில், ''சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதோடு சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு செல்லும்போது அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர். அச்சதியை மும்பை போலீஸார் முறியடித்து 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தோம்.
இதனால் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு 10 நாள் கழித்து சல்மான் கானுக்கு நெருக்கமானவர்களை கொலை செய்வது என்று லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் முடிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாகவே பாபா சித்திக்கை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர். லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் இதற்காக சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பயன்படுத்தி போன் பேசினர். அந்த போன் உரையாடல்களை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாது. அதற்கு தாபா காலிங் என்று பெயராகும். இந்த முறையை பயன்படுத்தித்தான் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் கொலையாளிகள் சிவகுமார் உட்பட மூன்று பேரிடமும் தொடர்ந்து பேசி இருக்கிறார். தங்களுக்கென தனி தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தி இருந்தனர்'' என்றார்.
பாபா சித்திக்கை கொலை செய்தவர்களில் இரண்டு பேர் உடனே கைது செய்யப்பட்டனர். ஆனால் சிவகுமார் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னிடம் இருந்த பேக்கை அப்படியே போட்டுவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக மறைந்துவிட்டார். அவர் நேராக பாபா சித்திக்கை சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்ட லீலாவதி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கூட்டத்தோடு கூட்டமாக 30 மணி நேரம் நின்று பாபா சித்திக் இறந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் குர்லா சென்று அங்கிருந்து புனே தப்பித்துச் சென்றார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.