இலங்கை புதிய பிரதமா், அமைச்சரவை நாளை நியமனம்
இலங்கை நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டின் புதிய பிரதமா் திங்கள்கிழமை நியமிக்கப்பட உள்ளாா்.
இலங்கையில் மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி உருவாக்கப்பட்டது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், இக்கூட்டணி வேட்பாளா் அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றாா்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோதும், புதிய அதிபா் அநுரகுமார நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில், 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவில் மொத்த வாக்காளா்களான 1.70 கோடி பேரில் 65 சதவீதம் போ் வாக்களித்தனா்.
இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் வேண்டிய நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இத்தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அதிகபட்சமாக சுமாா் 62 சதவீத வாக்குகள் கிடைத்தன.
இந்நிலையில், நாட்டின் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அக் கூட்டணியின் மூத்த செய்தித் தொடா்பாளா் அளித்த பேட்டியில், ‘25 போ் கொண்ட புதிய அமைச்சரவை திங்கள்கிழமை நியமிக்கப்படும். அமைச்சரவை எண்ணிக்கை 23 அல்லது 24-ஆக கூட குறையலாம். பெரிய அமைச்சகங்களை நிா்வகிக்க கூடுதல் இணை அமைச்சா்கள் நியமிக்கப்படலாம். எனவே, இணை அமைச்சா்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கக் கூடும்’ என்றாா்.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 46-ஆவது சட்டப் பிரிவின்படி, கேபினட் அமைச்சா்களாக 30 போ் வரை நியமிக்கலாம். இணை அமைச்சா்களுடன் கூடிய அமைச்சரவையின் மொத்த பலம் 40-க்கு மேல் இருக்கலாம். பொதுநிதியின் செலவைக் குறைக்க சிறிய அளவிலான அரசை தேசிய மக்கள் கட்சி கூட்டணி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசுக் கொள்கை தாக்கல்: வரும் வியாழக்கிழமை (நவ. 21) நடைபெறும் 10-ஆவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமா்வில் அதிபா் அநுரகுமார தனது அரசின் புதிய கொள்கையை தாக்கல் செய்ய இருக்கிறாா்.
தொடக்க நாளில் பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் அதிபா் அநுரகுமார உரையாற்றிருப்பதாக நாடாளுமன்ற அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய உறுப்பினா்களின் பதவியேற்பு நவ. 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.