செய்திகள் :

`இளையராஜா சார் கேஷுவலா சொன்ன பேரு... மாத்தமாட்டேன்' - படம் இயக்கும் ‘16 வயதினிலே' டாக்டர் சத்தியஜித்

post image

கமல்ஹாசன், ஶ்ரீதேவி ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமான '16 வயதினிலே' வெளியாகி 48 ஆண்டுகள் ஆகின்றன. கமல், ரஜினிக்கு இணையாக இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர், படத்தில் வெட்னரி டாக்டர் கேரக்டரில் வந்த சத்தியஜித்.

கூலிங் கிளாஸ், பெல்ஸ் பேண்ட் சகிதம் வந்து, 'இப்பக் கூட நான் ரொம்ப லைக் பண்றது உன்ன இல்ல, உன்னோட 16 வயசை' என அவர் ஶ்ரீதேவியிடம் பேசிய டயலாக் சோஷியல் மீடியா இல்லாத அந்தக் காலத்து வைரல் எனச் சொல்லலாம்.

சரி, அதற்கு இப்போது என்ன என்கிறீர்களா?

இரு தினங்களுக்கு முன் பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் நடந்த 'புல்லட்' கன்னடப் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார், தற்போது பெங்களூருவில் வசித்து வரும்  சத்தியஜித்.

புல்லட் டீசர் வெளியீட்டு விழாவில்

படத்தை இயக்கி, அதில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் சத்தியஜித்தைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

''சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிச்சு கோல்ட் மெடல் வாங்கிய செய்தி மறுநாள் பேப்பர்ல வந்தது. அதைப் பார்த்துட்டு ஸ்டில் போட்டோகிராபர் லக்ஷ்மிகாந்தன் எங்கிட்ட வந்தார்.  சிவாஜி சார், கமல், ஜெமினி சார் நடிப்பில் வெளியான 'நாம் பிறந்த மண்' ங்கற படத்தில் நான் நடித்திருந்தேன். அப்போ லக்ஷ்மி காந்தன் பழக்கம்.

'ஒரு படத்தில் டாக்டர் கேரக்டர் இருக்குனு சொல்லி ராஜ்கண்ணு சார் ஆபீஸ் க்கு கூட்டிட்டு போனார். அங்க கலைமணி சார் இருந்தார். எல்லாரும் சேர்ந்து உடனே கிளம்பி கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு போனோம். அங்க அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் பாரதிராஜா சார் என்னைப் பார்த்தார்.

கேஷுவலா சொன்ன பேரு தான் சத்தியஜித்!

'எங்கய்யா புடிச்சீங்க இவனை ன்னு கேட்டுட்டு, 'பேரு என்னன்னு கேட்டார்.  சபீர் னு சொன்னேன். இதை மாத்தணும்னு சொன்னார். ஆனா உடனே மாத்தலை. படத்தில் என் கேரக்டர் எனக்கு பிடிச்சிட்டதால் எம்பாட்டுக்கு படத்தில் கொஞ்சம் ஓவராவே ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிட்டேன்.

16 வயதினிலே

ஒருநாள் ராஜா சார் ரீ ரிக்கார்டிங்ல இருந்தார். நானும் பக்கத்துல நின்னு அவரையே பார்த்துட்டு இருந்தேன். பாரதிராஜா சாரும் உடன் இருந்தார்.

அப்பத்தான் 'இவனுக்கு ஒரு பேர் வைக்கணும்' னு டைரக்டர் ராஜா சார் கிட்ட சொல்ல, 'பார்த்தா இந்திக்காரன் மாதிரி இருக்கான்னு அந்தப்பக்கமுள்ள பெரிய ஆளு யாருடைய பெயரையாச்சும் வச்சிடலாமா னு கேட்ட ராஜா சார், அடுத்த நிமிஷம் கேஷுவலா சொன்ன பேரு தான் சத்தியஜித்.

அவ்ளோதான் அதுவே டைட்டில் கார்டு பெயராகிடுச்சு.

16 வயதினிலே' வெளியாகி சக்கைப் போடு போட்டது. ஒரே படத்துல ரொம்ப உயரத்துக்கு போயிட்டதாலோ என்னவோ, அந்தப் படமே என் அறிமுகப்படம்னு பேச  வச்சிடுச்சு. தொடர்ந்து நிறையப் பட வாய்ப்புகள் வந்தாலும், அந்த உயரத்தை எட்ட முடியலை. முடியலைன்னா அந்த மாதிரியான கேரக்டர் எனக்கு அமையலைனு தான் சொல்லணும்.

அதனாலேயே அறுவடை நாள் தொடங்கி  கடைசியாக 'ராட்சசி' வரைக்கும்  ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சும் இன்னைக்கும் வெட்னரி டாக்டர் கேரக்டர்தான் மக்கள் மனசுல நிக்குது.

இதற்கிடையில் டிவி பக்கம் போய் அங்கேயும் நிறைய சீரியல்கள் பண்ணினேன். இருந்தாலும் தமிழ் சினிமாவுல பிசியாவே இருக்கிற மாதிரி வாய்ப்புகள் அமையாததால் ஒருகட்டத்துல சொந்த மாநிலமான கர்நாடகாவுக்குப் போயிட்டேன்.

பெங்களூருல செட்டில் ஆகிட்டாலும், இங்க இப்பவும் எனக்குத் தமிழ்நாடு தந்த அடையாளம்தான் இங்கயும். அந்தளவுக்கு 16 வயதினிலே இங்கயும் ரீச்’’ என கடந்த காலத்தை நினைவுகூர்ந்த சத்தியஜித்திடம் மேலும் சில கேள்விகளை வைத்தோம்.

புல்லட் டீசர் வெளியீட்டு விழா

‘’சினிமா படிச்சு நாற்பது வருசம் கழிச்சு படம் டைரக்ட் பண்றீங்க, எப்படி?”

‘’சினிமாவை விட்டா எனக்கு வேற வேலை தெரியாது. அதனால குடும்பம் நடத்த வருமானம் கிடைச்சா போதும்கிற அளவுல சினிமா, டிவின்னு இங்கயும் இயங்கிட்டேதான் இருந்தேன்.

அப்பதான் லண்டன்ல இருக்கிற என்னுடைய நண்பர் ஜபருல்லா அங்க நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்லி, என்னையே டைரக்ட் பண்ணச் சொல்லிக் கேட்டார். சாக்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க கதை வசனம் எல்லாமே நான்தான்.

நடிகர் கீர்த்தி ராஜ் பையன் தர்மா கீர்த்தி ராஜ் ஹீரோவா நடிக்க மும்பையில இருந்து ஸ்ரேயா ஷுக்லாங்கிற ஹீரோயினை அறிமுகப்படுத்தியிருக்கேன். ’ஹம்’ படத்துல நடிச்சிருந்த சிவா ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கார். கோவா, மும்பையில ஷூட் முடிஞ்சு இந்த மாதக் கடைசியில ரிலீசாக இருக்கு. இந்தி, உட்பட மத்த மொழிகள்லயும் டப் செய்யப்பட இருக்கு.

டி.எஃப்.டி முடிச்சு 16 வயதினிலே வுல அறிமுகமான நாட்கள் என் வாழ்க்கையில எவ்வளவு முக்கியமானவையா இருந்ததோ அதோபோல ஒரு ஃபீலிங் இப்பவும் இருக்கு.

டீசர் வெளியீட்டு விழாவுக்கு கன்னட இண்டஸ்ட்ர்யில இருந்து நிறையப் பேர் வந்திருந்தாங்க.நல்லபடியா முடிஞ்சது நிகழ்ச்சி. டைட்டில் கார்டுல என்னுடைய ஒரிஜினல் பேர் சபீருடன் ராஜா சார் வச்ச சத்தியஜித்தையும் சேர்த்தேதான் வச்சிருக்கேன். சினிமா கத்துக் கொடுத்து நடிகனாகவும் ஆக்கிய தமிழ்நாட்டை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்’’

``திரும்ப தமிழ் படங்கள்ல எப்ப பார்க்கலாம்?”

’’நான் ரெடியா இருக்கேன். எப்ப யார் கூப்பிட்டாலும் வரத் தயாரா இருக்கேன். இப்ப இருக்கிற டைரக்டர்ஸ் கண்ணுல பட்டுட்டேன்னா அது நடக்கலாம்னு நினைக்கிறேன்.” என்றார்.

உலகத்தைப் பற்றிய பிம்பத்தை காட்டும் பயணம்! : மெய்யழகன் உணர்த்திய பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க