உலகத்தைப் பற்றிய பிம்பத்தை காட்டும் பயணம்! : மெய்யழகன் உணர்த்திய பாடம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மெய்யழகன் திரைப்படம் என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. அதில் நான் புரிந்து கொண்ட சில விஷயங்களை இங்கே பகிர்கிறேன்.
வாழ்க்கையில் கவலைகளும் கஷ்டங்களும் அனைவருக்கும் பொதுவானவே. சிலர் அதிலிருந்து விடுபட கற்றுக் கொள்கின்றனர். சிலர் தீர்வு பற்றி சிந்திக்காமல், அதிலேயே தங்களை ஈடுபடுத்தி இறுக்கமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களை சந்திக்கக்கூடிய மனிதனின் வாழ்க்கையில் 'ஏமாற்றம்' வரும்போது, அடுத்தகட்ட மாற்றத்தை ஏற்கத் தயங்குகின்றனர்.

Exam Fever :-
பிறந்தவுடன் தாய் தந்தையின் அரவணைப்பில் வாழ்கிறோம். அதற்கு அடுத்த கட்டமாக தனியாக பள்ளியில் விட்டு விடுவார்கள். முதல் நாள் அழுகையில் தொடங்கி, முழு ஆண்டு தேர்வு வரை நன்றாக சென்றிருக்கும். பள்ளியில் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடி, ஆசிரியரிடம் பாடம் கற்றுத் தேர்ச்சி அடையும் வேளையில், தேர்வு என்று நம்மை தனிமைப்படுத்தும் போது அச்சம் ஏற்படும்.
தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த வகுப்பிற்கு முன்னேற முடியாத, சீரற்ற வளர்ச்சி என்ற நிலை பயமுறுத்தும். இந்த பயத்தை எதிர்கொள்ள முடியாத தேர்வு நேரங்களில் சிலருக்கு காய்ச்சல் வரும்.
நாம் முதன்முதலில் சைக்கிள் ஓட்டப் பழகும் போது, நம்மை தாங்கிப் பிடிக்க யாருமில்லாமல் தனியாக ஓட்டுகிறோம் என்று எண்ணுகையில், பயம் ஏற்பட்டு கீழே விழுவதுண்டு. பயத்தைப் போக்க உறைமோர் கொடுத்திருப்பார்கள். விழுந்து எழுந்தவுடன் பிறர் உதவியின்றி தனியாக ஓட்டக் கற்றுக் கொண்டிருப்போம். இவ்வாறு, வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு என்பதை உணர்த்தி வளர்த்திருப்பார்கள்.

தேர்வு பயத்தினால் ஏற்பட்ட காய்ச்சலுக்குக்கான தீர்வு, தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறையில் ஒரு பயணம் செல்வதே. அந்தப் பயணமானது உலகம் குறித்த புரிதலும், நம்பிக்கையும் கொடுக்கிறது.
எங்கு, யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இவ்வாறு அவரவரர் நம்பிக்கைக்குரிய தலங்களுக்கு சொல்வதும் பயத்தை போக்கி நம்பிக்கை கொடுக்கிறது.
வீட்டைச் சுற்றியே வளர்ந்த நமக்கு, உலகத்தைப் பற்றிய பிம்பத்தை காட்டும் பயணங்கள் வாழ்வில் இன்றியமையாதவை. இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு படி நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட கற்றுக் கொடுக்கிறார்கள். சில நேரங்களில் ஏற்படும் ஏமாற்றங்களின் விளைவாக சிலர் நம்பிக்கையிழந்து வாழ்வதைக் காணலாம்.
Trust Issues:-
சொந்தக்காரர்கள் ஏமாற்றியதின் காரணமாக தான் நேசித்த வீட்டை இழந்து, ஊரை விட்டு வெளியேறுகிறார் அருள்மொழி. கோவில் குருக்கள், கோவில் யானை என செல்லும் இடமெல்லாம் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் அருள்மொழி, அதிலிருந்து தன்னுடைய நட்பு வட்டத்தை சுருக்கிக் கொள்கிறார்.

ஊர் சுற்றும் அளவிற்கு விவரம் அறிந்த வயதில் சொந்த வீட்டை இழந்த அருள்மொழி, சொந்த பந்தங்களை முழுமையாக வெறுக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களை தவிர. கிரிக்கெட்டில் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கும் அருள்மொழிக்கு, தற்போது ஆட்டமே ஆடாமல் நடுவராக மட்டுமே இருந்து வெளியேற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவே, எதையும் ஏற்றுக் கொள்ள முடியாத, யாரையும் புரிந்து கொள்ள முயற்சிக்காத மனிதராக வாழ்கிறார். சிறுவயதில் அவருடைய ஆதரவாளர்களில் ஒருவரான தன் தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊர் நோக்கி புறப்படுகிறார்.
The Journey:-
நேரம் அறிய கைகடிகாரத்தை பிரதானமாக பயன்படுத்திய காலத்தில் ஊரை விட்டு வெளியேறியவர், செல்போன் காலத்தில் மீண்டும் ஊருக்கு செல்கிறார். தான் வாழ்ந்த வீட்டை தயக்கத்துடன் வெளியிலிருந்து பார்க்கிறார்.
சொந்த ஊருக்கு விருந்தாளியை போல் வந்து செல்வது மிகவும் வேதனை தரக்கூடியது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் சிறு வயதில் கண்ட காட்சிகள் தற்போது பெருமளவில் மாற்றமடைந்திருப்பது கண்டு ஆச்சரியப்படுகிறார். அவர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவதற்கான முதல் படி அங்கு அமைகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு தோன்றுகிறது.

நீடாமங்கலம் நோக்கி பேருந்தில் பயணிக்கிறார். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மக்களை சந்திக்கும் ஊழியர்களாக பேருந்து நடத்துனர்கள் உள்ளனர். நாம் சிறுவயதில் பேருந்தில் பயணம் செய்யும் போது, நம்முடைய தந்தை நடத்துனரிடம் பேசும் விதத்தை பார்க்கையில், பேருந்து நடத்துனர் நம் தந்தையின் நண்பராக இருப்பாரோ..? என்ற கேள்வி எழும்.
தெரியாதவர்களிடம் கூட பண்பாக பழகும் தன்மை கொண்டவர்கள், நடத்துனர்கள். பேருந்தை பார்த்த ஆர்வத்தில் நடத்துனர் இருக்கையில் அமர்ந்த அருள்மொழியை நடத்துனருக்கு ஓரளவு தெரிந்த போதிலும், அருள்மொழியின் வெகுளித்தனமான பேச்சு, உங்களுக்கா என்னுடைய இருக்கையை வழங்கினேன்.! என்று சொல்லும் அளவிற்கு மாற்றிவிட்டது.
நீடாமங்கலம் நிறுத்தத்திற்கு முன் ஒரு ரயில் பாதை இடையூறாக உள்ளது. அந்தப் பாதை மீண்டும் திறப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். எனவே பேருந்தில் காத்திருக்காமல் மாற்று வழியே நடந்து சென்றால் எளிதில் சென்று விடலாம் என்று நடத்துனர் அறிவுறுத்துகிறார். அது அவருடைய வாழ்க்கையின் ஏற்பட்ட தடைகளால் தங்கியிருக்காமல் மாற்று வழியில் சிந்தித்து செயல்படுவதற்கு காரணமாக அமையப் போகிறது என்பதை அவர் அப்போது உணரவில்லை.
The Destiny :-
ஒரு வழியாக நீடாமங்கலத்தை அடைந்து திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார். அங்கே அவருக்கு ஆதரவாளராக இருந்தவர்களை மட்டும் அரவணைத்து பேசுகிறார். அதில் புதிதாக, பெயர் தெரியாத, தூரத்து சொந்தமான ஒரு நபரை சந்திக்கிறார்.
அவர் அருள்மொழியை 'அத்தான்' என்று உரிமையோடு அழைக்கிறார். ஆனால் அருள்மொழிக்கு அவர் யாரென்று தெரியவில்லை. அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படி கேட்பது என்ற தயக்கம் அவரைப் பற்றி விசாரிப்பதற்கு தடையாக உள்ளது. திருமண நிகழ்வு முடியும் வரை சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு மணமேடையை நோக்கிச் செல்கிறார்.

சிறுவயதில், விட்டு போகாதே.! என்று அழுத தங்கையை தற்போது, மணக்கோளத்தில் பார்க்கிறார். திருமண பரிசாக கொண்டு வந்த அணிகலன்களை தன் தங்கையின் விருப்பத்திற்கிணங்க மண மேடையிலேயே அணிவித்து மகிழ்கிறார். பிறகு திருமண விருந்திற்கு செல்கின்றனர்.
நகர்மயமாதலினால் நாம் இழந்த பாரம்பரிய உணவு வகைகளை திருமணம் மற்றும் கோயில்களில் மட்டுமே பார்க்க முடியும். சிறுவயதில் கோயில்களில் தரும் பிரசாதத்தை விரும்பி உண்ட அருள்மொழி, மீண்டும் சொந்த ஊர் உணவு வகைகளை சுவைக்கிறார். பார்லே-ஜி ரொட்டியை பார்த்தால் நமக்கெல்லாம் சிறுவயது ஞாபகம் வருவது போல, விருந்து உண்ட அருள்மொழிக்கும் தன்னுடைய பழைய நினைவுகள் நாக்கின் வழியே கடத்தப்பட்டதை, அவர் பேச்சு வழக்கில் மாற்றம் ஏற்பட்டது வைத்து உணர முடிகிறது.

அடுத்த நாள் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் அன்றிரவே ஊருக்குத் திரும்ப வேண்டுமென்று அவசர அவசரமாக கிளம்புகிறார். நீடாமங்கலத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத சொந்தக்காரரைக் கூட்டிக் கொண்டு கடைசி பேருந்தை பிடிப்பதற்காக புறப்படுகிறார்.
செல்லும் வழியில் விருந்தோம்பல் மரபின் படி நீடாமங்கலத்தின் சிறந்த நாட்டுப் பால் டீ வாங்கி கொடுக்கிறார், அவர் உறவினர். குடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் செல்லவிருக்கும் பேருந்து அவர்களை கடந்து சென்றுவிட்டது. ஒரு பக்கம் கோபமிருந்தாலும், வேறு வழியின்றி அன்றிரவு நீடாமங்கலத்திலேயே தங்கிவிடுகிறார்.
The Company:-
வீட்டிற்கு தயக்கத்துடன் சென்ற அருள்மொழி, தன்னைப் போலவே தன் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுக்காமல், பராமரித்து வாழும் தம்பதியை கண்டு ஆச்சரியப்படுகிறார். அவர்கள் தங்களின் சுப துக்கங்களை அருள் மொழியிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.
தன் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு துணைபுரிந்த அருள்மொழியின் பழைய சைக்கிளை நினைவுருகிறார். அந்நேரம் தனக்கு தேவைப்படாத ஒரு பொருள், மற்றவரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்டு உணர்கிறார் அருள்மொழி. மறந்து விட்ட அவருடைய சைக்கிளை மீண்டும் ஆசையோடு எடுத்து ஓட்டுகிறார். இருவரின் உரையாடல்களும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஊர், உலகத்தில் நடந்த போர்களையும் அதன் மூலம் நாம் இழந்த நிலங்களைப் பற்றியும், அந்த நிலங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் ஆளப்பட்டது பற்றியும் நினைவூட்டுகிறார். நிலங்கள் பறிபோனால் கூட மீட்டு விடலாம், ஆனால் பண்பாட்டை விட்டுவிடக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக, பாரம்பரிய ஏறுதலுவுதல் விழாவை அரசு தடை செய்த போது 'தமிழன்' என்ற உணர்வோடு அனைவரும் அதற்காக போராடியதையும் நினைவூட்டுகிறார்.
இவர் அருள்மொழியை ஊருக்கு அனுப்பி வைக்காமல் தன்னுடைய வீட்டுக்கு 'கூட்டியாந்தது', தன்னுடன் நாட்டுப் பால் டீ குடிக்கவோ, மது அருந்தவோ அல்ல. திருமணத்தில் முழுமையாக கலந்து கொள்ளாத அருள்மொழியின் அசட்டுத் தனத்தைக் கண்டு வருந்தி அவரை வேண்டுமென்றே தாமதமாக்கி தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
திருமணம் என்பது தம்பதிகள் தம் வாழ்வில் அடுத்த நிலையை நோக்கிச் செல்லும் நிகழ்வாகும். உற்றார் உறவினர் அனைவரின் ஒப்புதலோடும் நல்லாசியுடனும் நடைபெற வேண்டிய ஒன்று. மணமக்கள் இணைந்து வாழ அனைவரும் ஆதரவளித்து நம்பிக்கையூட்டுகின்றனர்.
தங்கை மீதுள்ள பாசத்தால் கண்ணீர் விட்டவர், தங்கையின் கண்ணீரைத் துடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக, அவருடைய பயணத்தை தடுத்து விட்டார். உறவுகளால் நமக்கு நன்மையோ அல்லது தீமையோ ஏற்பட்டால், நாம் அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய முற்பட வேண்டும்.
அந்த நன்மையானது அவர்களை நமக்கு எதிராக தீமை செய்ய விடாமல் தடுக்கும். இவற்றை எடுத்துரைத்து, அவருடைய வீட்டைப் பறித்தவர்களை மன்னித்து விடும்படி வேண்டுகிறார். தனக்கு சைக்கிள் கொடுத்ததைப் போல் அவர்களுக்கு வீட்டைக் கொடுத்ததாக எண்ணி, மன்னித்து விடும்படி வேண்டுகிறார். 'சரி, மன்னித்து விடுகிறேன்' என்று கூறி உரையாடலை முடித்து விடுகிறார் அருள்மொழி .
இறுதியில், தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு அருள்மொழி என பெயர் வைக்க விருப்பப்படுவதை கூறி, காலையில் எங்கள் பெயர் சொல்லி, எங்களை வாழ்த்த வேண்டுமென்று சொல்லிவிட்டு தூங்கி விட்டார். இதைக் கேட்டதும் அருள்மொழிக்கு தூக்கிவாரிப் போட்டது.
தூரத்தில் இருந்து கொண்டு, தன் மீது அதீத அன்பு காட்டிய அந்த நபரின் பெயரை, அவர் வீடு முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை. பெயர் தெரியாது என்பதை விட தெரிந்ததைப் போல் நடித்தது மிகவும் வேதனையளிக்கும் என்பதால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் வீட்டை நோக்கி புறப்படுகிறார்.

பேருந்திற்காக காத்திருக்கும் போது, கோயிலின் சாலையோரத்தில் பூஜைப் பொருட்கள் விற்கும் பெண்ணின் கரிசணத்திற்குப் பகரமாக, அவருடைய பெயர் தெரியாத தூரத்து உறவினருக்காக, சாமி பெயரில் அர்ச்சனை செய்யச் சொல்லி பணம் கொடுக்கிறார். இந்த முறை அமர்வதற்கு இடம் கொடுத்தவரிடம் நல்ல முறையில் விடை பெறுகிறார். பேருந்தில் பயணிக்கும் போது ஊர் எல்லையில் அமைந்திருக்கும் கோவிலை கவனிக்கிறார். அங்கு சென்று தன் பெயர் தெரியாத உறவினர் சொன்னது போல் தியானித்து, தன்னை உணர்கிறார்.
வீட்டிற்கு வந்து தன் மனமாற்றத்துக்கு காரணமாக இருந்தவரைப் பற்றி மனைவியிடம் கூறி, தான் செய்த தவறை எண்ணி வருந்துகிறார். இதை கவனித்த அருள்மொழியின் மகள், இருவரும் தொலைபேசியில் பேசுவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறாள்.
அருள்மொழியும் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறார். நடைமுறை மாற்றம், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களால் ஏற்படும் தவறுகளை மனிதர்கள் பெரிதுபடுத்துவதில்லை. தெரியாமல் நடத்துனருடைய இருக்கையில் அமர்ந்த போதும், சிறு வயதில் பார்த்தவரை வளர்ந்ததும் அடையாளம் தெரியாமல் போவதையும் குற்றமாக கருதப்படப் போவதில்லை. ஒரு மனிதன் தன்னைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பதையே குற்றமாக கருதப்படுகிறது.

சிறியவர்களாக இருந்த போது, நம் அத்தான்களை முன்மாதிரியாகக் கொண்டு, அவர்களைப் போல வாழ்ந்திருப்போம். எனவே, அவரைப் பற்றி விளங்கிக் கொள்ளும் போது தன்னைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் யாரென்று கண்டுபிடித்து விட்டால், தான் யாரென்பதைப் புரிந்து கொள்ள முடியுமென்பதாக இக்கதை முடிகிறது.
நம் சமூகத்தில் வாழ்ந்த பல தலைவர்களின் கொள்கைகள் நேரெதிராக இருக்கும் போதிலும், அவர்களிடமுள்ள நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு, கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவர்களை நினைவுருதல் வேண்டும். ஒருவரிடமுள்ள நல்லவற்றை மட்டும் பார்ப்பவர்களால், நல்ல பாம்புகளுடன் கூட இயல்பாக வாழ முடியும். உடல் மெலிந்த, சந்தையில் விலைபோகாத கன்றைக் கூட, கட்டுக் கடங்காத காளையாக மாற்ற முடியும்.
இறுதியில், அருள்மொழி வாடகைக்கு வசித்து வந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் கேட்கிறார். இச்செய்தி நீடாமங்கலம் வரை சென்று விடுகிறது, அவருடைய வாழ்க்கையில் நடைபெறும் மாற்றத்திற்கு தன்னுடைய பங்கைக் கொடுப்பதற்காக நீடாமங்கலத்திலிருந்து அழைப்பு வருகிறது. அங்கு சென்று கதவைத்தட்டி பெயர் சொல்லி அழைக்கிறார், கதவைத் திறடா மெய்யழகா.! வென்று.
மாற்றங்களே வினா.
மாற்றங்களே விடை. (Ref.)
- சுபி தாஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.