துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர்.
சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயலியில் (மேக்மைட்ரிப்) துருக்கி, அஜர்பைஜானுக்கான முன்பதிவு 60% சரிந்துள்ளது. அதோடு மட்டுமின்றி கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் 250% ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் மார்ச் மாத வருவாய் குறித்த அறிவிப்பின்போது இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் முன்பதிவுகளை ரத்து செய்வவதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் எதிரொலியாக இந்த இரு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிகளை நிறுத்திவைப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், மற்ற முன்னணி நிறுவனங்களான ஈஸ்மைட்ரிப் மற்றும் இன்ஸிகோவுக்கும் துருக்கி, அஜர்பைஜானுக்குச் செல்வதற்கு எதிரான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவிவரும் ராணுவ மோதல்கள் எதிரொலியாக சர்வதேச சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக துருக்கிக்கு நடந்த சுற்றுலா முன்பதிவில் 22% ரத்தாகியுள்ளன. அஜர்பைஜானுக்குச் செல்ல நினைத்து அதனை ரத்து செய்தவர்கள் 30%ஆக அதிகரித்துள்ளனர்.
இந்த இரு நாடுகளுக்கு முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்து செய்துவிட்டு, ஜார்ஜியா, செர்பியா, கிரீஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாமிற்கு முன்பதிவுகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சைப் பேச்சு: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!