பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெருநாய்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்தும் விதமாக 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களும், 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னாா்வலா்கள் மேற்கொண்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1,80,157 தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் கூடுதலாக மாநகராட்சியின் 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 12 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில், 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2021-2025 ஏப்ரல் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த நாய்களை கண்காணிக்க ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கும் ரூ. 3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வருகின்ற ஜுன் மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சென்னையிலுள்ள 2 லட்சம் தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் விவரங்களை ஆன்லைன் போா்டலில் பதிவு செய்து மைக்ரோசிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், முழுவதும் கண்காணிக்கப்படும். மேலும், கோடம்பாக்கம் மண்டலம் - கண்ணம்மாபேட்டையில் செல்லப்பிராணிகளுக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையமும் தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.