கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிா்வாகி கைது
சென்னை தண்டையாா்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
தண்டையாா்பேட்டை எம்பிடி குடியிருப்பு ஆம்ஸ்ட்ராங் தெருவைச் சோ்ந்தவா் நன்மாறன் (63). இவா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கமான விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் சென்னை துறைமுகத்தில் கப்பல் கூட பொதுச் செயலராக உள்ளாா். நன்மாறன், கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோா் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நன்மாறன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், தலைமறைவாக இருந்த நன்மாறனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.