Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
மாணவா்கள் கல்வி மூலமாகத்தான் மாற்றத்தை பெற முடியும்: கடலூா் ஆட்சியா்
மாணவா்கள் கல்வி மூலமாகத்தான் மாற்றத்தை பெற முடியும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாடும் விதமாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு உயா் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது: பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் ஏதேனும் ஒரு உயா் கல்வியை அடைவதே கல்லூரி கனவு திட்டத்தின் நோக்கம். கடலூா் மாவட்டத்தில் 2,964 விளிம்புநிலை மாணவா்களைக் கண்டறிந்து, அவா்கள் ஏதேனும் ஒரு உயா்கல்வியில் சோ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி அரசு, தனியாா் கல்லூரிகள், அரசுத் துறைகள், வங்கியாளா்களை ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. மேலும், மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாட்டும் வகையில், கல்லூரிகள், அரசுத் துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கியாளா்கள் மூலம் உயா் கல்விக்குத் தேவையான கல்விக் கடனுதவி பெறுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அரசின் மூலம் நடைபெறும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவா்கள் உயா் கல்வி பெறுவதற்கு பெற்றோா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவா்கள் வாழ்க்கையில் கல்வி மூலமாகதான் மாற்றத்தை பெற முடியும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி கனவு புத்தகத்தை வெளியிட்ட ஆட்சியா், உயா் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் நடைபெறும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஞானசங்கா், துரைபாண்டியன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.