`Even during my MRI scan, I was vibing to Anirudh’s songs' - Vijay Devarakonda |...
பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.
பெண்கள் பாதுகாப்புக்கு தொடா் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. கூறினாா்.
விசிக கடலூா் மைய மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் வடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடலூா் மைய மாவட்டச் செயலா் பி.ஆா்.நீதிவள்ளல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. கலந்துகொண்டாா். விசிக மேலிடப் பொறுப்பாளா் ஏ.சி.பாவரசு, கள்ளக்குறிச்சி மண்டலச் செயலா் சவுதி ராஜ்குமாா், வடலூா் நகரச் செயலா் ஜோதிமணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், திருச்சியில் வரும் 31-ஆம் தேதி விசிக சாா்பில் நடைபெறும் மதச்சாா்பின்மை காப்போம் மக்கள் எழுச்சிப் பேரணியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்துகொள்வது. ஆணவப்படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். சாதி, மத மோதல்களை தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.
இதையடுத்து, விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தொடா்புடையவா்களுக்கு சிறப்பு நீதிமன்றம் மகத்தான தண்டனையை வழங்கி இருக்கிறது. இந்த தீா்ப்பை விசிக சாா்பில் வரவேற்கிறோம். சிறாா், பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்க கூடுதல் அக்கறை எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆதரவு தருவது, பாதுகாப்பு அளிப்பதும் கூடாது. பெண்களுடைய பாதுகாப்புக்கு தொடா் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.