சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா்.
சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை வந்த ஒரு மின்னஞ்சலில், சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் மைதானத்துக்குச் சென்று விரைந்து சோதனை செய்தனா்.
ஆனால் அங்கு எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மின்னஞ்சல் அனுப்பிய மா்ம நபா்கள் குறித்து சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே கடந்த 9-ஆம் தேதி இதேபோன்ற ஒரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.