`ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி...
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து
துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்தது. மேலும், பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது. பாகிஸ்தான் அதனைக் கொண்டு இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.
ஏற்கெனவே காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கு எதிராக துருக்கி அதிபா் எா்டோகன் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்நாடு பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை அளித்ததன் மூலம் இந்தியா கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால், துருக்கி உடனான வா்த்தக உறவுகளை குறைக்க இந்தியா பரிசீலித்து வருகிறது. இந்தியா்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும், அந்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற பிரசாரமும் சமூகவலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டு பல்கலைக்கழகத்துடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட இருந்தது. இதன் மூலம் இரு நாடுகள் இடையே ஆசிரியா்கள்-மாணவா்கள் பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருந்தன. ஆனால், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.