மது போதையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து; பயணிகள் கதறல்.. சீட்டில் மட்டையான ஓ...
ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த விளக்கமுமின்றி ராணுவ நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டது ஏன் என்று பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ள காங்கிரஸ், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அரசியலாக்குவதாக பாஜகவை சாடியது.
அதேநேரம், "ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிமாகவே நிறுத்தப்பட்டுள்ளது; பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் என்ற வார்த்தையை மத்திய அரசு எங்கும் பயன்படுத்தவில்லை என்று பாஜக பதிலடி கொடுத்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்க, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி, இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி அதி துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் அனைத்தையும் "ஆபரேஷன் சிந்தூர்' தொடர் நடவடிக்கையின்கீழ் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் மத்தியஸ்தமே சண்டை நிறுத்தத்துக்கு காரணம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
அமெரிக்கா உடனான வர்த்தகத்தை கருவியாகப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தினேன் என்ற அவரது கருத்துகள், இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய நடைமுறையை இந்தியா மேற்கொண்டதாகவும்' கூறியிருந்தார். டிரம்ப்பின் கருத்துகள் குறித்து அவர் நேரடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம்: இந்தச் சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், கடந்த 20 நாள்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடத்திய மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு மற்றும் ஆயுதப் படையினருக்கு முழு ஆதரவையும் உறுதி செய்தனர்.
பிரதமர் பங்கேற்புடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த நாங்கள் கோரினோம். ஆனால், இரு அனைத்துக் கட்சிக் கூட்டங்களும் வெறும் சம்பிரதாய அளவில்தான் நடத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்கான கடந்த 1994-ஆம் ஆண்டின் தீர்மானத்தை மறுஉறுதி செய்வதற்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் கோரியது. ஆனால், அதுவும் ஏற்கப்படவில்லை.
பிரதமர் மௌனம் ஏன்?: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க அதிபர் அறிவித்தது ஏன்? இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன? என்பதை பிரதமர் மோடி நாட்டுக்கு தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார். அவர் விளக்கமளிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில் "ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் விரைவில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்ளப்படும்.
பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தையும் நடத்த வேண்டும். ஆயுதப் படையினருக்கும் தேசத்துக்கும் பெருமைக்குரிய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தனது முத்திரையாகப் பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை அரசியலாக்குவது கடும் கண்டனத்துக்குரியது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க வரும் 25-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் கூட்டம் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் முதல்வர்களை தவிர்ப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
எதிர்க்கட்சிகள் மீது பாஜக சந்தேகம்: காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் என்ற வார்த்தையை மத்திய அரசு எங்கும் பயன்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என்பதை மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதில் மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்துக்கு இடம் கிடையாது.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையாததால், எதிர்க்கட்சிகள் தேவையற்ற கேள்விகளை எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருபுறம் காங்கிரஸýம் பிற எதிர்க்கட்சிகளும் அரசுக்கு துணை நிற்பதாக கூறுகின்றன. மற்றொருபுறம், ஏதேதோ கேள்விகளை எழுப்புவது அவர்கள் மீது சந்தேகத்தை கிளப்புகிறது. ஆபரேஷன் சிந்தூர் முடிவடையட்டும்; அதன் பிறகு நீங்கள் (எதிர்க்கட்சிகள்) விரும்பும் எதையும் கூறுங்கள் அல்லது நாடாளுமன்றத்தைக் கூட்ட வலியுறுத்துங்கள் என்றார் அவர்.