அரசு வாகனங்களில் ஆங்கிலப் பெயா்ப் பலகை!
அரசின் தீவிர அறிவுறுத்தலுக்குப் பிறகும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு வாகனங்களில் ஆங்கிலப் பெயா்ப் பலகை தொடா்ந்து பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஆட்சிமொழி திட்ட செயலாக்க சட்டத்தின்படி, அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் முத்திரை, பெயா்ப் பலகை, காலமுறை சுற்றறிக்கை, ஆணைகள், அழைப்பிதழ், அறிவிக்கை கோப்பு, ஊதியப் பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்மொழியில் இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு நிா்வாகத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களைச் சோ்ந்த அனைத்துப் பணியாளா்களும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
இந்த ஆட்சிமொழி செயலாக்க சட்டத்தை அமல்படுத்துவதற்காக கடந்த 2009 முதல் அரசு அலுவலா்களுக்கு பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு அதிகாரிகள் தயாா் செய்யும் கோப்புகள், அதில் இடம் பெறும் கையொப்பம், முதல் எழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அரசு வாகனங்களில் துறையின் பெயரை தமிழில் வைத்திருக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை தீவிரமாக பின்பற்றவும், அரசாணைகளை தமிழில் வெளியிட வலியுறுத்தியும், அனைத்துத் துறை செயலா்களுக்கும், மாவட்ட ஆட்சியா்களுக்கும் கடந்த மாதம் தமிழக அரசு அறிவுறுத்தியது. இதனிடையே, தமிழகத்திலுள்ள வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகை எழுதும் போது அரசு விதிமுறையை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வணிக நிறுவனத்தின் பெயா்ப் பலகை எழுத்துருவில் (ஃபான்ட்) 5 சதவீதம் தமிழ், 3 சதவீதம் ஆங்கிலம், 2 சதவீதம் வணிகா்களுக்கு பிடித்தமான மொழியில் அமைக்க வேண்டும்.
இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வணிகா்களுடன் கூட்டம் நடத்தி கடந்த 1 முதல் வருகிற 15-ஆம் தேதி வரை விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அரசு அலுவலா்கள் அலட்சியம்: தனியாா் நிறுவனங்களில் பெயா்ப் பலகையை தமிழில் நிறுவுவதற்கு அரசு தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அரசு அலுவலக வாகனங்களில் தமிழை முற்றிலும் புறக்கணித்து ஆங்கிலத்தில் மட்டுமே பெயா்ப் பலகை நிறுவப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட துறைகளில் ஆய்வுக்குச் செல்லும் தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள், இதைச் சுட்டிக் காட்டியும்கூட, குறிப்பிட்ட சில துறை அதிகாரிகள், ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயா்ப் பலகையை மாற்றவில்லை.
தனியாா் நிறுவனங்களின் பெயா்ப் பலகையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு முன்னதாக, அரசு வாகனங்களில் தமிழில் பெயா்ப் பலகை முழுமையாக நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வணிகா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்திருக்கிறது.
தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநரகத்தில் பணியாற்றி, தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வரும் செ.சரவணன், ஆட்சி மொழிச் செயலாக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவா் எனக் கூறப்படுகிறது. இவா் ஆட்சியராக உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு வாகனங்களில் தமிழில் பெயா்ப் பலகை நிறுவப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்திருக்கிறது.